பக்கம்:கழுமலப்போர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வெப்பம் மிக்க கொடிய கதிர்களை வீசிக் காய்ந்தான். களிறுகள் பல முறை மிதித்து மிதித்து உழக்குவதாலும், ஞாயிற்றின் வெப்ப மிகுதியாலும், சேறு, சிறிது சிறிதாக ஈரம் புலர்ந்து உலரத் தொடங்கிவிட்டது. ஞாயிறு மேலைத் திசை அடைவதற்குள், களத்தில் ஈரம் அறவே புலர்ந்து விட்டது. ஈரம் அற்ற அக்களத்தைவிட்டு, களிறுகள் அந்நிலையிலும் அகலவில்லை. கால்களைத் தளைத்த சேறு அற்றுப் போனமையால், அவை, முன்னிலும் மிகுதியாக விரைந்தோடி அமர் புரிந்தன. அதனால் களத்தில் புழுதிப்படலம் எழுந்து படர்ந்தது.

களத்தில் சிந்திய செந்நீரின் ஈரம் புலர்ந்துவிட்டது. ஆனால் அக்குருதியின் செந்நிறத்தைக் களத்து மண் இழக்கவில்லை. அதனால், அக்களத்தில், எழுந்த புழுதி செந்நிறப் புழுதியாய், ஞாயிறு மறையும் செவ்வானம் என எழுந்து எங்கும் பரந்தது. ஆங்கு எழுந்த அப்புழுதிப்படலம், பவளத்தை இடித்துப் பொடியாக்கிக் காற்றில் பறக்க விட்டாற் போலும் காட்சி அளித்தது.

“நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள்மாய் குருதி, களிறு உழக்கத்—தான்மாய்ந்து
முன்பகலெல்லாம் குழம்பாகிப், பின்பகல்
துப்புத் துகளில் கெழூஉம், புனல் நாடன்
தப்பியார் அட்டகளத்து.” —களவழி : 1.

களிற்றுக் கோட்டால் குருதிச் சேற்றைக் கடத்தல் :

கழுமல நகரில் பாடிக் கொண்டிருந்த சேரநாட்டுப் பெரும் படைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தனர் செங்கணான் படை வீரர்கள். ‘மேதக்க வேழம் உடைத்து மலை நாடு’ எனப் பாராட்டப்பெற்ற மலை நாட்டு மன்னனாதலின், சேரன் படையில் யானைகள் அதிகமாய் இருந்தன. அவ் யானைப்படையை அழித்து அமர் வெல்வது அவ்வளவு எளிதன்று ஆயினும், அக்களிற்றுப்படை கண்டு, சோணாட்டுப் படைவீரர் கலங்கினாரல்லர்; கையில் வாளேத்திக் களம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/68&oldid=1360442" இலிருந்து மீள்விக்கப்பட்டது