பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இணக்குற்ற இதயம் மீதூர்ந்
தெழுந்தநல் எண்ணம் பற்றிப்
பிணக்கற்ற நாகப் பன்தான்
பேசினான் தொடர்ந்து : “நானும்
உணக்கற்றேன். உடுக்கக் கற்றேன்;
உறங்கிடக் கற்றேன்; ஊரில்
கணக்கற்ற நன்மைக் கின்று
காரணம் கவிஞன்,” என்றே.

மூவரும் காலை உணவு கொள்ளல்

பற்றுள்ள உள்ளம் கொண்ட
பணக்கார நாகப் பன்,பின்
கற்றுண்டு களிக்கும் நந்தன்
கவிஞனோ டொருங்க மர்ந்து
சிற்றுண்டி வகைகள், நல்ல
சிறுமலைப் பழம், தேன், பாலும்
பெற்றுண்டு மகிழ்ந்தெ ழுந்தே
பிறிதொரு இடம்சேர்ந் தார்கள்.

சிற்றுண்டி முடித்துக் கொண்டு
சென்றவர் அமரும் போதே,
தெற்றென அறிந்து யாவும்
திருத்தமாய்ச் செய்யும் சாந்தி,
மற்றொரு தட்டில் நல்ல
மணங்கமழ் பாக்குத் தூளும்
வெற்றிலை சகிதம் ஏந்தி
விருந்தினர்க் கருகில் வைத்தாள்.

105