பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாகப்பன் வரவேற்றல்

பூவாத பூவை யொத்த
புவனத்தின் குரலைக் கேட்டே
ஏவாத நாகப் பன்தான்
எழுந்துவந் தெதிரில் நின்று,
“நோவாத வாறிவ் வூரின்
நோய் தீர்க்க வந்திங் குற்ற
தேவாதி தேவர் போன்றீர்!
தீர்ந்ததென் குறைதான்,” என்றான்.

வள்ளியம்மாள் வரவேற்றல்

தேடிய செல்வ மெல்லாம்
தேவையுள் ளோர்கட் கீந்து
கூடியே வாழும் அன்புக்
கொழுந்தனின் வரவைக் கண்டு,
மாடியை விட்டி றங்கி
மதனியும் விரைந்து வந்தே,
நீடிய உவகை யோடும்
“நீங்கிற்றெம் துயரம்,” என்றாள்.

பிரிந்தவர், கூடிப்பேசி மகிழ்தல்

ஆறுத லாக அங்கே
அகமகிழ்ந் திருந்தெல் லாரும்,
கூறுதற் கியலா வாறு
கொடுந்துயர் உற்றோர் இன்று.
மாறுத லாகி ஊரில்
மலர்ச்சியுற் றிருக்கும் செய்தி
தேறுத லாயெ டுத்துத்
தித்திக்கப் பேசித் தீர்த்தார்.

113