பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"சாத்திரம் கற்றீர்; தேச
சரித்திரம் கற்றீர்; யார்க்கும்.
சேத்திர தரிச னத்தால்
சென்மசா பல்ய மென்றே,
மூத்தவர் மொழிந்த இந்த
முதுமொழி கற்கா தையோ!
நாத்திகம் பேசு கின்றீர்!
நன்றுமக் கன்றி தென்றே.

நாத்திக விளக்கமும்,
மக்கள் இழிநிலைக்குக் காரணமும்
"நாத்திகம் என்ப தென்ன?
நல்லவர் நயந்து போற்றும்
ஆத்திகம் என்ப தென்ன?
அறிவதை அறிந்தா ராய்ந்து
மூத்தவர் மொழிந்த அந்த
முதுமொழி கல்லா தோன்யார்?
சூத்திரம் கற்றாய் நண்பா,
சொற்பொருள் அறியா மல்நீ.

பிறரிதைத் தொன்று தொட்டே
பிதற்றின ரெனினும், பேணி
அறங்கடைப் பிடித்தோர் மட்டும்
ஆத்திக ராவர்; அல்லாப்
புறஞ்சொலல் பொய்பொ றாமைப்
புல்லர்நாத் திகர்க ளென்றே
உறத்தின்று கூறு வேனுன்
உள்ளத்தில் படியு மாறே.

14