பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          சாந்தி 'தந்தேன்’ என்று உரைத்தலும்,
          நந்தன் அவளுயர்வை வியத்தலும்
          “திரண்டதன் செல்வ மெல்லாம்
          தேசத்தின் நன்மைக் கென்றே,
          மருண்டமான் அனைய நோக்கம்,
          மாமயில் அனைய சாயல்,
          சுருண்டுநீண் டடர்ந்த கூந்தல்
          சொற்செல்வி சொன்ன சொற்கள்
          இருண்டதோர் வீட்டில் ஏற்றும்
          இணையற்ற விளக்கென் கோயான்

          பசும்புல்லும் கருகக் காய்ந்த
          பாரிடைப் பருவம் வாய்த்து,
          விசும்புவந் தெளிதில் பெய்து
          விதைப்பிடும் மழையி தென்கோ?
          நிசம்பொய்யை ஓர்ந்து ரைத்த
          நீதிமான் மொழியி தென்கோ?
          வசம்புனைந் துரைக்கும் வன்மை
          வாய்த்திலேன் அம்ம! யானும்.

          நெல்லிலே வளரும் புல்லாய்
          நீணிலத் திருப்போ ரெல்லாம்
          கல்லிலே தெய்வங் காணக்
          கழிக்கின்ற காலத் தில்யான்,
          இல்லிலே இல்லா ளாயென்
          இதயத்தில் இருந்து வாழ்வாள்
          சொல்லிலே, தெய்வ மொன்றோ
          சுவர்க்கமுங் கண்டே னன்றோ”!

31