பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செடிகொடிகள் தழையற்று நிற்றல்
கடைகடை வேலிக் காலில்
கவினொடும் பூத்தி ருந்த
செடிகொடி யனைத்தும், மக்கள்
செல்வத்தின் செழுமைக் காக,
நடவிடைத் தம்பால் உள்ள
நார்தழை உரமாய் நல்கிக்
கொடைமடம் பட்ட வள்ளல்
குமணன்போல் நிற்கக் கண்டான்.

பறவைகள், மீன்களை உணவாக்கிக் கொள்ளல்
கருகாது வெயிலில் மேனி,
கலையாது காற்றில் கூந்தல்,
உருகாது துன்புற் றோருக்
கோங்காது கடனைத் தந்தே,
அருகாது வட்டி வாங்கி
அயராது தின்பா ரைப்போல்
குருகாதி மீனைக் கண்டே
குலையாது குத்தக் கண்டான்.

வாழையும் கரும்பும் காண்டல்
கலைதள்ளி விட்டோர் வாழ்வில்
கம்பலை காய்த்து முற்றி
நிலைதள்ளித் தலையைத் தாழ்த்தி
நிலம்நோக்கி நிற்ப தேபோல்
குலைதள்ளி நிற்கும் வாழைக்
கொல்லையைக் குளிர நோக்கி,
'விலைதள்ளி விற்றால் கூட
வீடிடம் கொள்ளா' தென்றான்.

48