பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          நாகப்பன் வேதனையோடு செல்லல்
          "காற்கொண்டு நடந்து சற்றுக்
          காற்றாட வந்தேன்; அந்தோ!
          வேற்கொண்டு தைத்தல் போலும்
          வேதனை யுற்றேன்; போதும்;
          மேற்கொண்டு சொல்லச் செய்ய
          மெலிவுற்றேன், ஐயா!” என்று
          கோற்கொண்டு நிலதில் ஊன்றிக்
          குனிந்துநா கப்பன் சென்றான்.

          கவிஞன் வயலில் நாற்று நடுவோரைக்
          கண்டு எண்ணமிடல்
          பார்ப்பன மகளிர் உண்டு
          பகல் தூக்கம் போடும் நேரம்,
          ஏர்ப்பரம் படித்த நல்ல
          இளஞ்சேற்றில் குனிந்து கொண்டு
          சேர்ப்புறும் சேரிப் பெண்கள்
          சிறிதுடல் வலிமை இல்லார்
          நார்ப்புறம் பற்றிச் சோர்ந்து
          நடவிடும் வயலைக் கண்டான்.

          இழைப்பதில் எல்லாம் ஏற்றத்
          தாழ்வினை இணைத்து வைத்தும்,
          உழைப்பதில் பங்கு கொள்ளா
          துண்பதில் பங்கீ யாதும்,
          பிழைப்பதில் வல்லோர் செய்த
          பித்தலாட் டத்தால் நாடு
          தழைப்பதற் கின்றிச் சாலத்
          தாழ்வுற்ற தெனவே ஓர்ந்தான்.

68