பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலவச் செல்லல்
வளம்படு வயல்வாய்க் காலில்
வளர்ந்திடும் பயிரைக் கண்டும்,
களம்படு கெல்லின் குப்பை
காற்றெடு துாற்றல் கண்டும்,
குளம்படு குமுதம் கஞ்சம்
குவிந்திட விரிதல் கண்டும்,
உளம்படும் உணர்ச்சிக் காக
உலவிட விரும்பிச் சென்றான்.

மக்களின் வேதனை காணல்

சோலைக்குள் கண்ப டுத்துச்
சோர்வுநீத் தெழுந்து கூவிக்
காலைக்குக் காத்தி ருந்த
காகங்கள் பறத்தல் போலும்,
சாலைக்குள் இரும ருங்கும்
சஞ்சலம் முகத்தில் தேங்க
வேலைக்குச் செல்லும் மக்கள்
வேதனை கண்டான் நின்றே.

கவிஞன் இயல்பு

மாடொன்றென் னுடைய தென்றே
மகிழுவார்; மாடும், கூட
வீடொன்றென் னுடைய தென்றே
விளம்புவார்; வீடும், கூடக்
காடொன்றென் னுடைய தென்றே
கழறுவார் கண்டு காண,
நாடொன்றென் னுடைய தென்றே
நவிலுவான் கவிஞ னானான்!

6