பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கவிதையும் வாழ்க்கையும்


கவிதைகளை ஆராய்ந்து, அவற்றில் தத்தம் அரசியல் கொள்கைகளைப் புகுத்த முற்படுவது சற்றும் பொருந்தாததாகும். அரசியல் வேறு, கவிதை வேறு. அரசியல் நாளைக்கு ஒரு விதமாக மாறலாம். ஆனல். கவிதையின் அடிப்படையான பண்பாடு என்றும் மாருது. எனவே, இரண்டையும் பின்னிப் பிணைப்பது எவ்வாறு பொருந்தும்? இது நிற்க.

ஒரு நூலை ஆராய வேண்டுமாயின், அதை முற்றும் பல முறை பயின்று, ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும் கருத்துக்களை வரிசைப்படுத்தி, அவற்றின் நலங்கேடுகளை ஆராய வேண்டும். அவ்வாறன்றி, இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில பாடல்களைப் படித்து, அவற்றின் அளவிலே நூலைக் கண்டு விட்டதாகச் சொல்லுதல் முடியுமா? ஒரு பாணச் சோற்றுக்கு ஒருசோறு பதம்’ என்பதை எதற்குப் பொருந்துமோ, அதற்குப் பொருத்த வேண்டும். கவிதை உலகில் ஒன்றைப் பதம் பார்த்து அனைத்தையும் முடிவு கட்டுதல் எவ்வாறு இயலும்? ஒரே,கவிஞன் இயற்றும் ஒரே காவியத்திலேயே பல ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஏற்றத்தை மட்டும் கொண்டு.அக்காவியமே அவ்வாறு ஓங்கியது என்றோ, அன்றித் தாழ்வுைக் கொண்டு அவ்வாறே தாழ்ந்தது என்றோ கொள்ளுதல் அறிவுடையதாகுமோ? நூல் முழுவதையும் நுணுகி ஆராய்ந்து அவ்வாராய்ச்சியை உலகுக்குப் பயன்படவைப்பதே திறனாய்வாகும். மேலே நாட்டுக் கவிதைகள் பலவும் அவ்வாறே ஆராயப்பெறுகின்றன. இங்கோ, அந்த நிலை இல்லை.

நம் நாட்டு ஆய்வு முறையில் மற்றொரு குறையும் நேர்கின்றது. தமிழ் நாட்டு இலக்கியங்களில் பல, இப்போது தேவைப்படாதவை எனச் சிலர் பேசுவதைக் காண்கின்றோம், பிற நாடிடார் கலப்பால் நாட்டில் சில இலக்கியங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை அடியோடு வேண்டா என ஒதுக்க விழைகின்றனர் சிலர். அவற்றை இல்க்கியங்களாக—கவிதைக் கோவைகளாக—கொள்ளின் வரும்.இழுக்கென்னையோ? பெரிய புராணமும் கம்பராமாயணமும் எரிக்கப்பட வேண்டிய நூல்கள் எனப் பேசும் அளவுக்குத் தமிழர் ஆராய்ச்சிசெல்கிறது.