பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

137



உலகில் பொருள்களை உயர்த்தும் நெறியில் தொண்டாற்றுகிறதென்பர். அதனாலேயே இஃது உவமையை ஒத்துப் போற்றப் படுகின்றது போலும்!

இனி, இவ்வுவமை எப்படி இலக்கியத்திற்கு-கவிதைக்கு-சிறப்பு நல்குகிற தென்பதைக் கண்டு மேலே செல்லலாம். முதலாவதாகச் சாதாரண உவமையைக் காண்போம். ஒரு பொருளை நேரடியாக எடுத்துச் சொல்வதிலும் அதையே ஒர் உவமை வாயிலாக விளக்கின், அப்பொருள் பற்றிய கருத்து நன்கு விளங்கும். வள்ளுவர் முதலிய புலவர் பலரும் இக்கவிதை நலத்தைக் கையாண்டிருக்கின்றனர்.

செல்வம் யாரிடம் சிறக்க விளங்கும் என்பதை வள்ளுவர் விளக்க வந்தார். முன்னமே அச்செல்வத்தைப் பற்றிய உவமைத் தன்மையைக் கண்டோம். செல்வம் அற்பரிடம் சேரின் கொடுமையை விளைக்கும் என்பது அது. அதே செல்வம் நல்லவரிடம் சேரின் என்னாகும் என்பதையும் எண்ணிப் பார்க் கின்றார் வள்ளுவர். செல்வம் நல்லவரிடம் சேர்ந்தால், அவர்கள் அதைத் தமக்கென வைத்துக் கொள்ளாது மற்றவருக்கு வழங்குவர். இந்த உண்மையை இப்படியே நேரடியாகச் சொல்லிவிடலாம். ஆனால், அதைக் காட்டிலும் உவமை முகத்தான் சொல்லின், கல்லார்க்கும் கற்றவர்க்கும் எல்லார்க்கும் எளிமையில் விளங்கும் என்று எண்ணிற்று அவர் கவிதை உள்ளம். அவர் ஒரு நல்ல உவமையை எடுத்துக் காட்டுகின்றார்.

நல்ல மாமரம்-இனிய பழங்களைத் தரும் மரம். அது பூத்துக் குலுங்கிக் காய்த்துப் பழுத்துப் பயன் விளைக்கும் காலம் தொடங்கிவிட்டது. ஆனால் அந்த மரம் எங்கேயோ -காட்டிலோ அன்றி அடைய முடியா நெடு வழியிலோ-பழுக்கவில்லை. மக்கள் வாழும் ஊரில், அவர்களுக்குப் பக்கவில், அனைவரும் கொள்ளத்தக்க வழியில், பொது மன்றத்தில் அம் மரம் நிற்கின்றது. பொது மன்றத்தில் பழுப்பது அனைவருக்கும் உரியதுதானே? அப் பழங்களும் அனைவருக்கும் உரியனவாகின்றன. 'உண்ண வாரும்.' என்று யாரும் அழைக்க வேண்டுவது மில்லை. அனைவரும் கூடி உண்ணும்


க. வா.-9