பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

141



தான் இவ்வுவமையில் அவர் இத்துணை நல்ல முறையில் உவமை நலம் பெய்து தேவர்தம் இழிநிலையையும் விளக்குகின்றார். மனம் போன போக்கெல்லாம் போகும் மனிதனை யாராவது விரும்புவரோ? விரும்பார். எனவே, தேவர் வாழ்வையும் அவர் நாட்டையும் நல்லவர் யாரும் நாடார் என்பதை, வள்ளுவரைத் தவிர வேறு யார் இவ்வளவு திட்டமாகவும், அதே வேளையில் நாகரிகமாகவும் காட்ட முடியும்? இவர் அடியொற்றி இவர் பாடல்களை அப்படியே எடுத்தாளும் சாத்தனார், தம் மணிமேகலையில் இவ்வடியை வைத்துக்கொண்டு, ஆபுத்திரன், வாயிலாக, இந்திரனைச் சற்று நாகரிகமற்ற முறையிலேயே கண்டித்திருப்பதை அறிவோம். அதுபற்றிப் பின்னர் வாய்ப்புளதேல் காண்போம்.

வள்ளுவர், தமது கவிதை நலம் பெற்று நிற்க, இத்தகைய நல்ல உவமைகளின் மூலம் பல உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றார். இன்னும்,

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்,'

(475

என்றும்,

"நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.'

(476)

என்றும் உவமையைப் பல்வேறு வகையில் ஆங்காங்கு எடுத்தாண்டு, தம் கவிதை மூலம் நல்ல பொருள்களையெல்லாம் விளக்குகின்றார். அவற்றையெல்லாம் பின்னர்க் காண்பதற்குரிய இடங்களில் கண்டு ஆராய்வோம்.

வள்ளுவர் மட்டுமன்றி, இவ்வுவமையை மேற்கொள்ளாத சாதாரணப் புலவரும் இல்லை. தமிழ் இலக்கியத்தில் மட்டுமின்றி, உலக மொழிகளில் வாழும் எந்தக் கவிஞனும் இந்த உவமையைவிட்டிருக்க முடியாது. உவமை இன்றேல், கவிதை நிறைவு பெற்றதாகாது. உயிரும் உடலும் சொல்லும் பொருளுமாகக் கவிதைக்கு அமையுமாயினும், அந்த உயிரோடு கூடிய மெய் உலவத்தக்க ஆற்றலைத்தருவது இந்த உவமையே