பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கவிதையும் வாழ்க்கையும்



முடியாத நம்பிக்கை. இந்தச் சூரியனும், இதைச் சுற்றிய உலகங்களுமே தோன்றிப் பல கோடி ஆண்டுகள் ஆயின என்றால், இவற்றிற்கு முதற்காரணமாய் உள்ள இந்த அண்ட முகடு எப்போது தோன்றிற்று என்பது கூற முடியுமோ? இந்த நிலத்தில் இருக்கும் மண்ணையும், கல்லையும் தோண்டி, இந்த உலகத்தின் வயதை ஒருவாறு கணக்கிடுகின்றார்கள் நிலநூல் ஆராய்ச்சியாளர்கள். அதைப் போன்றே, இந்நிலத்து மண்ணுள் மறைந்து கிடக்கும் எலும்புகளையெல்லாம் எடுத்தெடுத்து ஆராய்ந்து, அவற்றின்மூலம் உயிர்த்தோற்றத்தையும். வளர்ச்சியையும் எண்ணிக் கணக்கிடுகின்றனர் உயிர் நூல் ஆராய்ச்சியாளர். இவை இரண்டையும் சேர்த்து உயிர்களும் உலகமும் என்றென்று தோன்றின என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து அவர்கள் அலுத்து விட்டார்கள் என்றே சொல்லலாம். என்றாலும், அவர்கள் கணக்கின் வழிப்படி இவையெல்லாம் தோன்றப் பலப்பல கோடி ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும் என்றே முடிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு துறையையும் ஒவ்வொருவகையில் மேலை நாட்டினர் பெருக்கி, அவற்றின் வழியே தாம் தாம் காணவிரும்பும் உண்மைகளைத் தம்மை மறந்து தேடிக்கொண்டே யிருக்கின்றனர். முடிவில் இதுவரை அவர்கள் காண்பதெல்லாம், தோற்ற நாளைக் காண முடியாது என்பதே. ஓரளவு கண்டார்கள் என்று கொள்ளினும், அவ்வாண்டின் எண்ணிக்கை நம் கணக்கின் எண்ணிக்கையில் அடங்கா வகையில் அப்பால் சென்று முடியும் ஒன்றாகவே உள்ளது. எனவே, நாம் வாழும் இவ்வுலகம் அண்டப் பரப்பில் ஒர் அணுவென்பது ஒருபக்கம் இருக்க, இந்த அண்ட கோளத்தின் ஆயுளில் நம் வாழ்நாள் ஒரு நொடி என்றே கொள்ளவேண்டும். இவ்வாறு இடத்தாலும் காலத்தாலும் மிகக் குறுகிய நிலையில் உள்ள நாம், இந்த உலகத்தில் நம் வாழ்க்கையை நடத்திக் கொண்டே செல்கின்றாம். இந்த உலகும் அண்டகோளமும் அமையுமுன் என்னென்ன மாற்றங்கள் எவ்வெவ்வாறான கால எல்லையில் அமைந்துள்ளன என்பதைக் கண்டு, பிறகு நம் உயிர்த்தோற்ற நாளுக்கு வருவோம்,