பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

கவிதையும் வாழ்க்கையும்



அவை இன்னும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் செல்லுகின்றன. இங்கும் அவை பலப்பல வகையில் ஆராயப்பெற்று, அரசாங்கத்திடமும் மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்று உயர்கின்றன. காரணம் என்ன? ஒரு சிலர் தீவிரமாக, இந்தக் கவிதைகள் நாட்டுக்குத் தீங்கிழைப்பன: இவை தேவை இல்லை; என்று நாடெங்கும் பறைசாற்றிக் கூறியும், வெறுப்புக் காரணமாக அவற்றை எடுத்துக்காட்டியுங்கூட, அவை மேன்மேலும் வளர்ந்து கொண்டே சென்று, நாட்டுக் காவியம் என்ற பெயரளவிலன்றி உலகக் காவியமாகவே மாறக் காரணம் என்ன? அந்தக் கவிதைகளில் வாழ்க்கை பின்னிக் கிடப்பது ஒன்றுதான் முக்கிய காரணம். உதாரணமாகக் கம்பராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். அதை நம் நாட்டில் வேண்டா என்று வெறுப்பவர் சிலர் உளர். அது வடநாட்டுக் காவியம்; தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது: தமிழர் பண்பாட்டுக்கு ஒவ்வாதது; எனவே அதை நாட்டை விட்டே ஒழித்துவிட வேண்டும்' என்பர் ஒரு சாரார். அவர்கள் வாதப்படி, அது சரியென்றே வைத்துக்கொள்வோம். அப்படி மக்களுக்கு ஒவ்வாத காவியம் ஏன் நாட்டில் வாழ வேண்டும்? அவ்வாறு வாழ்தல் மக்கள் சமுதாயத்துக்குக் கடு செய்வதாகத்தான் முடியும். அதை இல்லை என்று எவர் மறுக்கக்கூடும்? வடநாட்டு வாழ்க்கை முறைக்கும், பண்பாட்டுக்கும், பிற நிலைகளுக்கும் ஏற்ப, வால்மீகி அந்தக் கதை எழுதினர் என்றால், அது அந்த நாட்டுக்கு ஏற்றதாகட்டும். இங்கு ஏன் அது மொழி பெயர்க்கப்பட்டு, பயிலப் பெறல் வேண்டும்? அதுவும் இந்நாட்டுப் பண்பு, கலாசாரம், சமுதாயம் ஆகிய ஒன்றுக்கும் ஒவ்வாத கதை அதுவாயிற்றே? இதை இங்கே வாழவிடலாமா? கேள்விகள் சரியானவைதாம். கதை வடநாட்டுக் கதைதான். வடவர் தம் பழக்க வழக்கங்களும் வேறுதான். ஆனால், அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் என்ன செய்தார் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

இன்று உலகம் சுருங்கிய அளவில் வந்து விட்டது. ஒரே நாளில் நாமும் உலகைச் சுற்றி வந்துவிடும் நாள் அண்மையில்