பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வொடு பிணைந்த கவிதை

261



உள்ளது. இந்தச் சுருங்கிய உலகில் எத்தனையோ நாடுகள் உள்ளன. அவ்வவற்றின் பண்பாடுகளும் கலாசாரமும் பிறவும் வெவ்வேறானவை. அவை பற்றி வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களும் அளவில. அவற்றையெல்லாம் உலகில் பல பகுதிகளில் வாழும் மக்கள் தத்தம் மொழியில் பெயர்த்தெழுதிப் பயில ஆரம்பித்து விட்டார்கள். ஆங்கிலத்தில் உள்ள சேக்ஸ்பியரின் நாடகங்கள் பல தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இப்படியே பல மொழிகளிலும் பலப்பல இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆயினும், அவற்றில் ஆங்கில வாடை அதிகமாக இராது. ஆங்கில நாட்டில், மணமும் மணமுறிவும். மாற்றானோடு கைகோத்து நடனமாடுவதும், குடித்து மயங்கி முறைமாறி நடப்பதும் வாழ்வியல்பு. அதை அந்நாட்டு இலக்கியங்கள் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன.அந்த நாடகங்களையோ பிற இலக்கியங்களையோ தமிழில் மொழி பெயர்க்கும்போது, அப்படியே மொழி பெயர்த்துவிட்டால் அவற்றை யார் பயிலுவர்? யார் அந்த மொழிபெயர்ப்புக் காவியங்களுக்கு ஏற்றம் தந்து போற்றுவர்? ஆனால், அந் நாடகங்களை, அவற்றின் அடிப்படைத் தன்மை கெடாத வகையிலே, நம் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ற் முறையில் மாற்றி எழுதின், அவை மக்களால் போற்றப்படும் என்பது உறுதி. ஆங்கில மொழியில் மட்டுமன்றி, இன்றைய உலக மொழிகள் பலவற்றிலிருந்தும் பலப்பல கதைகளும் காவியங்களும் தமிழில் பெயர்க்கப்படுகின்றன. ஆயினும், அவற்றுள் பெரும்பாலன தோன்றிய சில காலத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன. ஒரு சில, நம் நாட்டுக் கவிதைகளுக்கு ஒப்ப, நாட்டில் உலவிச் சிறக்க வாழ்கின்றன. காரணம் ஒன்றேதான். அந்த வாழும் கவிதைகளை மொழி பெயர்த்தவர்கள், பிற நாட்டுக் கவிதையாயினும், நம் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப அதனை அமைத்து, முதல் நூல் நிலையும் கெடாது ஆக்கியிருக்கிறார்கள் என்பதே. எனவே, அவ்வந்நாட்டு மக்களது வாழ்வோடு பின்னிய காவியங்கள், கவிதைகள், அனைத்தும் வேண்டாவென வெறுத்தாலுங்கூட, அவை வளர்ந்து கொண்டேதான் போகும்.