பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

365


காதலியரைக் கட்டித் தழுவிப் பேசும் காதல் கவிதைகளைச் சீவகன் வாயிலாகப் படித்த நாம், பின் அவன் துறவு நிலையில் அவர்களை நோக்கிக் கூறுவனவற்றைப் படிப்பின், ‘இரு கொள்கைகளும் ஒருவர் உள்ளத்திலிருந்தா பிறந்தன?’ என்று எண்ணத் தோன்றும். நூல்வழிப் புகுந்து சீவகன் காதற் பாடல்களையும், அவனுடைய துறவுப் பாடல்களையும் ஒருசேர ஆராய்வார்க்கு இவ்வுண்மை புலப்படும். இன்னும், அரச நெறி, சாதாரண மக்கள் வாழ்வு வாணிபவாழ்வு, பிறவாழ்க்கை இயல்புகள் அனைத்தையும் நூலுள் காணலாம். எனவே, ஒரு சமயம் பற்றிய நூலாயினும், சிந்தாமணி மக்கள் வாழ்வைப் பல கோணங்களில் கண்டு உலகுக்குத் தருகின்ற காரணத்தால், இன்றும் வாழும் இலக்கியமாகிவிட்டது. இம் மூன்று பெருங்காப்பியங்கள் காட்டும் பல்வேறு வாழ்க்கை நுணுக்கங்களையும், அவை பற்றிய விளக்கங்களையும் தனித்தனி ஆராயின், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெரு நூலாக அமையும். எனினும், இங்கு இந்த அளவோடு நிறுத்தி, வாய்ப்புள்ளவர் அந்நூல்கள் வழி ஆய்ந்து ‘உண்மை காண்க’ என்று கூறி, மேலே செல்லுகின்றேன்.

இதுவரை கூறியவற்றான், பெருங் காப்பியங்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்ற மூன்றும் மக்கள் வாழ்வோடு தொடர்புகொண்டு எவ்வாறு வாழ்கின்றன என்பதை அறிந்தோம்.