பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





 

6. சமய இலக்கியங்கள்


ணிமேகலையும் சிந்தாமணியும் பெளத்தையும் சமணத்தையும் போற்றிய வகையினை ஒரளவு கண்டோம். அந்தக் காலத்திலிருந்தே சமயங்களைப் போற்றி வளர்க்கும் கவிதைகள் நாட்டில் வளரலாயின. சங்க காலத்தில் ஒரளவு சமய உணர்ச்சி இருந்ததேயாயினும், அக்காலத்தில் சமயப் போட்டியும், சமயப் பூசலும் நாட்டில் இல்லை. முருகன், சிவன், திருமால் போன்ற தெய்வங்களின் பெயர்களும், அவர்தம் திறன், செயல் முதலியனவும் சங்ககால இலக்கியங்களில் பேசப்படுகின்றன. என்றாலும், அவை தம்முள் மாறுபட்டவைகளாகவோ, வேறுபாட்டுக் கொள்கைகளை வளர்ப்பனவாகவோ அமையவில்லை. சங்க காலத்திலே தமிழ் நாட்டில் சைவமும், வைணவமும், சமணமும், பெளத்தமும் இருந்தன வாயினும், அவை தம்முள் மாறுபட்டுப் போராற்றவில்லை. ஒன்றை ஒன்று பழிக்கும் இலக்கியங்களும் எழவில்லை. அவற்றுக்குள் போட்டி மனப்பான்மையோ, பொருமை மனப்பான்மையோ எழவில்லை. ஆனால், மணிமேகலை காலத்துக்குப் பிறகு இன்றுவரை நாட்டில் சமயக் காழ்ப்பும், கசப்பும் வளர்ந்து கொண்டேதான் வருகின்றன.

உலகில் பல்வேறு சமயங்கள் இன்று வாழ்கின்றன. சமயத்தைத் தோற்றுவித்து வளர்த்த பெரியாரும் பல்லோர். ‘கடவுள் இல்லை. உலகப் பொருள்களே சதம்,’ என்று போற்றும் நாத்திகம் கலந்த உலகாயத மதம் முதல், சைவ வைணவ சமயங்கள் ஈறாகப் பலப்பல சமயங்கள் தமிழ் நாட்டில் தோன்றியும் குடிபுகுந்தும் வளர்ந்து வருகின்றன. பிற நாட்டுச் சமயங்களும் இன்று இந்நாட்டில் வாழ்கின்றன.