பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கவிதையும் வாழ்க்கையும்


பாடப்பெறுமாயின், அது பாட்டாகின்றது. தொல்காப்பியத்திலும் பாக்களைப் பிரிக்கும் ஆசிரியர், அவை பாடப்படுதற்கு ஏற்ற தனித்தனி ஒசை வகைகளையும் பிரித்துக்காட்டுகின்றார். பாட்டு என்பதற்கு இலக்கணம் கூறும்போது, ‘அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ (344) என்கின்றார். செய்யுளாகிய பாவினத்தின் பல்வேறு இயல்புகளையும் கூறி, அவற்றின், சேர்க்கைகளாலும் அமைப்பாலும் பொருந்தும் அடியினை விளக்கி, அவ்வடிகள் அளவுக்கேற்பவும், அமைப்புக் கேற்பவும் பொருந்தி வருதலே பாட்டு எனக் காட்டுகின்றார் ஆசிரியர். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Stanza’ அல்லது ‘Song’ என்ற பிரிவுக்கு அந்நாட்டார் பொருளாகக் கொள்கின்றனர். எனவே, அடிகள் சிலவோ, பலவோ பொருந்தியது பா ஆகின்றது. அப் பா, பாடப்படும்போது பாட்டாகின்றது, இலக்கண விளக்கம், அடியும் தொடையும் பரவி நடப்பதே பாட்டாகும் எனக் குறிக்கின்றது. எனவே, பாட்டு, கவிதையாகிய பாவினைப் பண்னென்றப் பாடுவதேயாகும்.

பாடல் என்ற சொல்லுக்கே ‘இசைப்பா’ என்ற பொருளும், உண்டு. சிலப்பதிகாரத்தே மங்கல வாழ்த்துப் பாடல் உள்ளதை நாம் அறிவோமே! மங்கல வாழ்த்தாக இசை பொருந்தப் பாடப்பெறும் பாடல்களன்றோ அவை? பாடிதம்: என்ற சொல் உச்சரிக்கப்படுவது என்ற பொருளில் வழங்குகின்றது. சமயப்பாடலைத் தோத்திரம் என்ற சொல்லால்' வழங்குகின்றோம். இப்பாடல் கற்பாரை மட்டுமின்றிக் கேட்பாரையும் தன்னிடத்தே பற்றி ஈர்க்கும் தன்மை வாய்ந்தது. வெற்று இசைக்கே அந்தப் பண்பு உண்டன்றோ? தமிழ் நாட்டில் வழங்கும் இசையில் மயங்காதார் யார்? பாடல் வழியிலேதான் இசையை அனுபவிக்க முடியும் என்றால், ‘குழல் இனிது யாழ் இனிது என்ப' என்ற தொடருக்கே பொருள் இல்லையாகுமே! குழல் வழித் தோன்றும் இசைப் பாடலின் பொருள் என்ன? யாழ் எதைப் பற்றிப் பாடுகின்றது? அதன் பொருள் என்ன? இன்றும் இராக ஆலாபனையும் நம்மை மயங்கவைக்கும் நிலையைக் காண்கின்றோம். ஆம். இவை,