பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கவிதையும் வாழ்க்கையும்


பாரதியாரின் பாடல்களை வழுவுடையன; ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல' என்று பேசிய மக்கள் இன்றும் வாழ்ந்துதான் வருகின்றார்கள். ஆனால், இன்று அப் பாரதியார் சாகாவரம் பெற்ற அமரகவியாகி விட்டார். அவர் பாடலில் இலக்கண வரம்புகள் சில இல்லாமலும் இருக்கலாம். எனினும், அவர் பாடல்கள் கவிதை உலகிலே சிறந்த இடம் பெற்றுள்ளதை மறுப்பார் யார்?

இத்தகைய நாட்டுப் பாடல்களையும், கிராமியப் பாடல்களையும் ஒதுக்கலாகாது என்று அன்றுமுதல் பலர் அறிவுறுத்தியுள்ளனர். இடைக் காலத்தில் கவிச்சக்கரவர்த்தியாராய் வாழ்ந்த கம்பர் இவ்வாறு ஒரு கிராமத்தானிடம் அகப்பட்டு அவன் பாட்டின் நிலையறியாது நின்ற கதை நாட்டுக்குப் புதியதன்றே? ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு உண்டோ? என்று இன்று உலக அரங்கேறியுள்ள அழகிய இராமாயணத்தைப் பாடிய அக் கம்பரே வியந்த பாடல் எந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்கது? மூங்கில் இலை மேலே என்ற ஏற்றப்பாட்டின் முடிவு காணாது திகைத்துப் பின் அந்த ஏற்றக்காரனே, 'தூங்கும் பணி நீரே என்று முடித்த பிறகுதான், அப்பாடலும் கவிதை என்ற உணர்வு அவர் உள்ளத்தே பிறந்தது. ஆகவே, சாதாரணப் பாடல்களாயினும், மக்கள் உள்ளம் கொள்ளும் வகையில் அமைந்தனவெல்லாம் மதுரப்பாடல்களே. அந்த வகையிலேதான் இந்த மதுரகவி என்ற பிரிவு அமைந்தது என்று திட்டமாக நான் கூற முன் வரவில்லை. அதுபற்றி அறிஞர் முடிவு கூறட்டும். எப்படியாயினும், இனிமையான கவிதைகளை 'மதுரகவி என ஒரு பிரிவாகப் பிரித்து, இடைக்காலத்தில் தமிழ்க் கவிதைகளை நான்கு பெரும் பிரிவுகளாக்கியுள்ளனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

மதுர கவியைப் பற்றிய ஆய்வை இந்த அளவோடு நிறுத்தி, அடுத்ததற்கு வருவோம். அடுத்துள்ள சித்திர கவி பற்றி முன்னமே பார்த்துவிட்டோம். எனவே, இன்னும் அறிய வேண்டிய கவி வித்தாரம் ஒன்றே. வித்தாரம் என்பது, வடமொழியாம் ‘விஸ்தாரம்’ என்பதன் திரிபேயாகும்.