பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

71


விஸ்தாரம் என்ற சொல் விளக்கமாக அல்லது விரிவாக அமைவதைக் குறிக்கும். ‘விஸ்தரித்துப் பேசு’ என்றால், நான் விளங்குமாறு பலவாக எடுத்துக் காட்டு என்பதுதானே பொருள்? எனவே, இவ் வித்தார கவிகளும் மற்றவரைக் காட்டிலும் விளக்கமாகப் பாடப்படுவன என்பது புலனாகின்றது. ஆசுகவி, அவசரத்தில் எடுத்த பொருள்பற்றி ஒரு வெண்பாவோ வேறோ பாடி முடித்து விடுவான். மதுரகவி, இனிய நல்ல உளம் தொடும் பாடல்களையே புாடுவான் போலும்! சித்திர கவியும் ஒரு சித்திரத்துக்குள் அடங்கும் வகையிலே, ஒருபாட்டைப் பாடி முடிப்பவன் தானே? ஆனால், வித்தாரகவியோ, எடுத்த பொருளை விளக்கும் வகையில் எத்தனை பாட்டுக்கள் வேண்டுமானலும் பாடுவான். புலவன் உள்ளமும் கைக்கொண்ட கோலுமே அவன் பாட்டின் எல்லையை வரையறுக்கத் தக்கவாறு அமைவனவாகும். கடல் மடை திறந்தால் ஒத்த’ என்று ஒர் உவமை சொல்வதுண்டு. அவ்வுமையைப் போன்று எல்லையில்லாது ஆயிரக் கணக்கிலே பாடல் பாடுபவன் வித்தார கவியாவன். இந்த இலக்கணப்படி நம் நாட்டில் காவியம் இயற்றியுள்ள அத்தனை பேரும் வித்தாரகவிகளே அவர்தம் காவியங்கள் அத்தனையும் வித்தார கவிதைகளேயாம்.

இந்த வித்தார கவிதையைத் தமிழில் ‘’அகலக்கவி என்றும் சொல்லுவர். அகலம் என்பதும் விரிந்து பரந்த ஒரு பொருளைத்தானே தருகின்றது? எனவே, பரந்த காவியங்கள் வித்தார கவிகளாகும். பாட்டியல் என்னும் நூலானது இவ்வித்தார கவிக்கு இலக்கணம் கூறுகின்றது. இதன்படி இவ்வித்தார கவி இரண்டு வகைப்படுகின்றது. ஒன்று, ஒரு வகைப் பாவே தொடர்ச்சியாக அமைய ஏதாவது ஒரு பொருள் பற்றியோ வரலாறு பற்றியோ பலப்பல அடிகள் பாடிக் காவியத்தை முடிப்பது; மற்றொன்று. பல வகைப் பாடல்கள் சேர்ந்து, பொருள் பற்றியோ, வேறுவகையிலோ பலப்பல பாடல்களால் ஆக்கிக் காவியத்தை முடிப்பது. முன்னதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன் சான்றாகும்.