பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கவிதையும் வாழ்க்கையும்


ஆசிரியப்பா என்ற ஒரே செய்யுளிலே எடுத்த காவியத்தைப் பலவாறு பெருக்கிக்கொண்டு சென்று முடித்துள்ளார்கள் ஆசிரியர்கள். பின்னதற்குச் சங்ககாலப் பாட்டும், பிற்கால்க் காவியங்களாகிய சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவையும் உதாரணங்களாக அமையும். இவை பொருள் பற்றியும் வரலாறு பற்றியும் பல்வேறு வகைப்பட்ட பாடல்களைக் கொண்டு முடியும் கவிதைத் தொகுதிகள் தாமே? எனவே, இவ்வாறு விரிந்த நிலையில் விளக்க வரும் பொருளையோ கதையையோ காட்டும் கவிதைகளைப் பாடுவோர் வித்தார கவிகளாவர். அக் கவிதைத் தொகுதிகளே வித்தார கவிகளாம்.

கவிதையை எத்தனையோ கோணங்களிலிருந்து பாகு படுத்திப் பார்த்தோம். அதன் விரிவு எல்லையற்று வளர்ந்து கொண்டேதான் செல்கின்றது. நாம் மேலே கண்டபடி, சங்க காலத்தில் இருந்த நிலையைக் காட்டிலும் பிற்காலத்தில் கவிதை விரிவடைந்து விட்டது. கவிதை விரிவடைய விரிவடைய காப்பியங்களும் நாட்டில் பெருகலாயின. எனவே அக் காப்பியங்களுக்கும் இலக்கணம் கண்டாக வேண்டிய ஒரு நிலை இலக்கணப் புலவர்களுக்கு ஏற்பட்டது. தண்டியலங்காரத்திலே ஆசிரியர் காப்பியத்துக்கே இலக்கணம் கற்பித்து விட்டார். அவர்மேல் தவறில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயல்புதல்தானே மரபும் முறையும்? அந்த வகையில் அக்காலத்தில் நாட்டில் நடமாடிய இலக்கியங்களை—காப்பியங்களை—கவிதைத் தொகுதிகளை வைத்துக்கொண்டு காப்பியங்களுக்கு இலக்கணம் வரைந்து வரலாற்றுக்கு ஏற்ற ஒன்றே யாகும்.

காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என இரண்டாகப் பிரித்தார் ஆசிரியர்; பெருங்காப்பிய நிலை பேசுங்காலை என்று ஒரு பெரிய சூத்திரத்தையே பீடிகையுடன் பெருங்காப்பியத்துக்கு இலக்கண வரம்பாக அமைத்து விட்டார். அதிலே என்னென்ன வகையான பொருள்கள் இடம்பெற வேண்டும்? அவை எந்தெந்த வகையில் பாடப்பெற வேண்டும்? அக் காப்பியத்தைப் படிப்பதால் உண்டாகும் பயன் என்ன?