பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கவிதையும் வாழ்க்கையும்


தமிழ் நாட்டில் சங்க காலத்துக்குப் பிறகு எத்தனையோ படையெடுப்புக்கள் நடந்துள்ளன. சங்க காலத்துக்கு முன்னரே வடமொழியாளரும் பிறரும் தமிழ் நாட்டில் கலந்து வாழ்வாராயினர். பின்னர், எத்தனை எத்தனையோ வகையான இனத்தாரும், மொழி பேசுவாரும், வாழ்க்கை நெறி வகுப்பாரும் இந்நாட்டில் இடம் பெறலாயினர். அவரவர் கூட்டுறவு காரணமாக அவர்தம் மொழியும், கலையும், கலாசாரமும் கலக்க ஆரம்பித்ததில் வியப்பில்லையன்றோ! கலைத்துறையில் பிறமொழிகளைக் காட்டிலும் வடமொழியே தமிழுடன் அதிகமாக உறவு கொள்ள ஆரம்பித்தது. அந்த உறவின் வழியே, பல வடமொழிக் காப்பிங்களும், கவிதைகளும், வரலாறுகளும் தமிழில் இடம் பெறலாயின. அதை ஒட்டிப் பல பிரபந்தங்கள் தமிழில் எழலாயின. தமிழில் தொண்ணுற்றாறு வகைப் பிரபந்தங்கள் உண்டு என வரையறுக்கிறது பாட்டியல். அவற்றுள் பெரும்பாலான காலத்தாற் பிந்தியனவே. ஆற்றுப்படையும், அறிவுறுத்தலும் சங்க காலத்தில் காண்கிறோம். ஆனால் கோவையும், அந்தாதியும், கலம்பகமும், பிள்ளைத்தமிழும், இரட்டை மணி மாலையும், மும்மணிக் கோவையும், இவைபோன்ற இன்னும் பலவும் இடைக் காலத்தில் நாட்டில் எழுந்தன. இவ்வாறு நாட்டில் வளர்ந்த இடைக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் சமயங்கள் பற்றியே எழுந்தன எனலாம்.

தமிழ்நாட்டு வரலாற்றின் இடைக்காலத்தே எத்தனையோ சமயப் போர்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. சங்க காலச் சமயநெறியை வெல்லச் சமணமும் பெளத்தமும் போட்டியிட்டன. பெளத்தத்தை வென்று சமணம் வாழ்ந்தது. பின் சைவமும் வைணவமும் தழைத்தன. இப்படி ஒன்றை ஒன்று வென்று தத்தம் கொள்கையை நிலைநாட்டிக் கொள்ளச் சமயங்கள் பாடுபட்டன. அக்காலங்களிலெல்லாம் பொது மக்கள் மனநிலையை அறிந்து அவர்கள் மனங்களைத் தத்தம் பக்கல் இழுக்கப் பலப்பல பாடல்கள் தேவையாய் இருந்தன போலும்! இன்று நம் அரசாங்கத்தார் தம் ஆட்சி திறனை