பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கவிதையும் வாழ்க்கையும்


நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு என்றனர் புலவர். அவற்றின் விரிவையெல்லாம் பின்னே காணலாம்.

தமிழ்க் கவிதைகளின் தோற்றத்தின் காலத்தை இன்னதென அறிய முடியாவிடினும், இன்று அது கடலினும் பரந்து நிற்பதைக் காண்கின்றோம். தமிழன் தொன்மையைக் கடந்தது தமிழ்க் கவிதை. அந்தப் பழமைக்குப் பழமையாய் உள்ள தமிழ்க் கவிதை இன்றும் புதுமைக்குப் புதுமையாகவும் அமைந்து தமிழர் வாழ்வை உலகுக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமன்றி, திருந்திய மொழிகளுள்ள நாடுகளிலெல்லாங்கூட, அவ்வந்நாட்டுக் கவிதைகள் நாட்டின் அச்சாணியாகி அமைவதை அறிஞர் அறிந்துள்ளனரன்றோ! கடல்போலப் பரந்த கவிதைப் பிரிவில் நாம் கண்டன. சில: காணுதன பல. பிற்காலத்தே தோன்றிய சந்தக் கவிதைகளும் அவற்றின் பிரிவுகளும் பலவாகும். இவ்வாறு இன்னும் எத்தனையோ கவிதை வகைகள் உண்டு. சமயம் நேருங்கால் பின்னர் அவற்றைப் பற்றியெல்லாம் ஆங்காங்கே கண்டு கொண்டே செல்லலாம். -

இதுகாறும் கூறியவற்றால், கவிதைக்கு உள்ள வேறு தமிழ்ப்பெயர்கள் யாவை என்பதும், அவை எவ்வாறு பொருந்துவன என்பதும், அச்செய்யுள்கள் யாப்பு முதலிய செய்யுள் இலக்கணப்படி எத்தனை எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன என்பதும், கவிதைகள் இலக்கண முறையிலன்றி வேறு எவ்வெவ்வகையில் எவ்வெவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன. என்பதும், இப்பாடல் பழங்காலந்தொட்டு இன்றுவரை என்னென்ன வகையில் மாற்ற்ம் பெற்று வந்துள்ளதென்பதும், இடைக்காலத்தில் பிரிக்கப்பட்ட ஆசு, மதுர, சித்திர, வித்தார கவிகள் யாவை என்பதும், இன்று நாட்டிலே பிறந்த பாட்டியல் வழியாக எழுந்த இலக்கியங்கள் இவையென்பதும், இவை அனைத்தும் ஒரோ வழியில் கவிதைத் தொகுதியில் அடங்குவனவே என்பதும் கண்டோம். மேல் இக்கவிதை ஊற்றுக்கு முதலிடமான கவிஞரைக் காண்போம்.