பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கவிதையும் வாழ்க்கையும்



தோன்றக்கூடும். கதைகளிலும், படங்களிலும் கவிஞர்களை இந்த வகையிலேதான் காண்கின்றோம், கதாசிரியர்களும் இவர்களை அத்தகைய ஏழ்மை நிலையிலேதான் சித்திரிக்கின்ரறால்கள். 'கலையை வாழ்க்கைக்காக அர்ப்பணிக்க மாட்டோம்!" என்ற விடாப்பிடியோடு வாழ்வில் வழுக்கி விழுந்து மாய்ந்த கவிஞர் கதைகள் நாட்டில் அளவிறந்தன. அவற்றுடன் வாழ்க்கையில் உண்ண உணவுக்கும், உடுக்க உடைக்குங்கூட வழி இழந்த கவிஞர் பலர், கதைகளின்வழி நம்முன் காட்சி தருகின்றனர். சங்ககாலம் தொடங்கி இன்று வரையிலும் சிறந்த கவிஞர் எனப்பட்டவரெல்லாரும் அவ்வாறே அல்லல் உற்றார் என்பதுதான், பலருடைய முடிபாய் உள்ளது. தம் முடிவுக்கு ஏற்ற வகையில் அண்மையில் வாழ்ந்த பாரதியாரின் வாழ்க்கையையும், வேறு பல இலக்கியச் சான்றுகளையும் எடுத்துக் காட்டுவர். வாழும் காலத்தில் பாரதியார் வறுமையில் வாடினர் என்பர். வறுமை அவரிடம் இருந்தது மெய்தான். ஆனல், வறுமையில்லை அவர் வாடினர் என்பது பேதைமை இதைப்போன்றே எத்தனையோ சங்க இலக்கியங்களும் புலவர்தம் வறுமையைப் பலவகையில் எடுத்துக் காட்டுகின்றன என்றாலும், தமிழ்ப் புலவர்கள் அந்த வறுமையில் வாடி வதங்காது, வாழ்வில் வெற்றி கண்டவர்கள் என்றே கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி, உலக மொழிகளிலெல்லாம் சிறந்த கவிதையின் வளம் பெருக்கிய நல்ல கவிஞர்கள் தம் வாழ்க்கையை அவ்வளவு திறம்பட அமைத்துக் கொள்ளவில்லை என்றே எழுதுகின்றனர். ஆங்கிலநாட்டிலே பெருங்கவிஞராய், இருந்தவர் எல்லாரும் தம் வாழ்வுக்காலத்தில் அவ்வளவாகச் சிறக்கவில்லை என்பதை ஒரளவு ஒத்துக்கொள்ளலாம். பிற்காலத்தில் உலகம் போற்றும் உயர்ந்த கவிஞர்களாய் உள்ளவர்களெல்லாம் தத்தம் வாழ்வுக் காலத்தில் அத்துணை உயர்ந்த வாழ்வில் திளைக்கவில்லை என்று அறிந்தோர் கூறுவர். ஆனல், அதன் மூலம் அவர் தம் வாழ்வில் கண்டது தோல்வியே என்று முடிவுகட்ட முடியுமா?