பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

83


மலரவனிலும், அழியாக் கவிதை படைக்கும் புலவரே மேலானவர் என்ற கருத்தை அமைத்து,

‘கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான்:—மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றவர் செய்யும் உடம்பு.’ (நீதிநெறி. 7)

என்கிறார். இப் புலவர்களை வாழ்வில் வெற்றி காணுதவர் எனக் கூற முடியுமா?

எனினும், இப் புல்வர்கள் வாழ வகையறியாது, செல்வ நிலையில்—வாழ்க்கை வழியில்—தோல்வியே பெற்றார்கள் என்று சிலர் வாதிக்கக் கூடும். அதற்குச் சான்றீக இப் புலவர்தம் பாடல்களையே எடுத்துக் காட்டக்கூடும். சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக்கிய்ங்களிலும் புலவர் வறுமையைப் பற்றிப் பலப்பல பாடல்கள் உள்ளன. ஆற்றுப்படை நூல்களிலே புலவன் அரசரைக் காண்பதன்முன் இருந்த அவல நிலையும், பின்னர் அரசன் அளித்த அரும்பெரும் பொருள் பெற்று வாழ்ந்த பெருநிலையும் பேசப்படுகின்றன. குமணனைப் பாடிய பெருஞ்சித்திரனர் போன்றோர் தம் பாடல்களிலேயும் வறுமையின் வெறியாட்டம் தெரிகின்றது. அவற்றைக் கொண்டு புலவர்கள் வாழ்வில் தோல்வியுற்றவர்களே என்பர் சிலர். அவர் கூறும் ஆதாரங்களுள் சிலவற்றைக் காண்போம்:

சங்க இலக்கியமாகிய பத்துப் பாட்டில் மன்னரைப் பாடிய நான்கு ஆற்றுப்படைகள் உள்ளன; இறைவனைப் பாடிய திருமுருகாற்றுப் படையை நீக்கி முதலில் மூன்றையும், பின்வரும் கூத்தர் ஆற்றுப்படையாகிய மலைபடுகடாம் என்ற நூலையும் கொள்ளுவர். இவற்றுளெல்லாம் பாடுகின்ற புலவர் பொருநரையும் பாணரையும் கூத்தரையும் முன்னிருத்தி, அவர்கள் வாடிய வறுமை நிலையை விளக்கிப் பின் இன்னின்ன அரசரைக் கண்டமையின் இன்னின்ன வகையான சிறப்புப் பெற்றார்கள் எனக் குறிக்கின்றனர். அவற்றின் மூலம் புலவர் தம் வறுமை நிலை ஒருவாறு புலனாகின்றதென்பர்.