பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கவிதையும் வாழ்க்கையும்


ஒரு புலவர் ஒய்மா நாட்டு நல்லியக் கோடனைப் பாடுகின்றார்; அவன் கொடைத் தன்மையைக் குறித்துப் பாராட்டுகின்றார்; இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பது அவர் பெயர். அவர் பாடல் சிறுபாணாற்றுப்படையாகும். பரிசில் பெற்ற பாணன் மற்றொரு பாணனை நல்லியக் கோடனிடம் செல்ல ஆற்றுப்படுத்தும் நூல் அது. அதில் அப் பாணன் வள்ளல் கோடனைச் சென்று அடையுமுன் இருந்த நிலையைக் காட்டுகின்றார் புலவர்; அவ்வளவு எளிய நிலையில் பாணன் வாழ்ந்தான் என்கிறார். அப் பாணன் நிலை மூலம் புலவர் தம் வறுமையையே காட்டினார் என்பர் சிலர். எப்படியாயினும், அவ்வடிகள் கண்டு மேலே செல்லல் அமைவுடைத்து.

பாணன் வீட்டில் அடுப்பு மூட்டிப் பல நாள்கள் ஆகி விட்டனவாம். பாவம்! அப் பாணன் மனைவி வீட்டில் உணவில்லை என்பது அறிந்து வாளாவிருக்க முடியுமோ? குழந்தைகள் உணவு உணவு என்று அழத்தொடங்கியிருக்கும். பாவம்! புலவர் மனைவி புறக்கடைக் குப்பை மேட்டில் முளைத்த வேளைக் கீரையைப் பறித்து வந்தாளாம். அதற்கு இட உப்பு வாங்கவும் பணம் இல்லை போலும்! அதை வேகவைத்துத் தன் சுற்றத்துடன், உண்டாளாம். ஆயினும், அந்த ஏழ்மை நிலையை மற்றவர் காண்பது இழிவு என்று நாணிக் கதவடைத்து உண்டார்களாம். அத்தகைய அழிபசி அவர்தம் வீட்டில் ஆதிக்கம் செலுத்தியது போலும் அவர்களை மட்டு மன்றி, அவர்தம் வீட்டில் வாழ்ந்த நாயின் மேலும் அந்த அழி பசியின் ஆதிக்கம் இருந்தது போலும்! இக் காட்சியைப் புலவர் வாக்கிலேயே காணலாம்.

‘திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் கோனாது
புனிற்றுகாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்