பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

85


வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்' (130–140)

என்று அழகாகப் புலவர் அந்த அழிபசியின் கொடுமையை விளக்குகின்றார். இவ்வாறே பிற ஆற்றுப்படைகளிலும் புலவர் தம் வறுமைநிலை ஒருவாறு காட்டப்படுகின்றது. ஆற்றுப் படைகள் மட்டுமன்றித் தனியாகப் புலவர்கள் பாடிப் பாடல்களிலும் இந்த வறுமை நிலை இல்லாமல் இல்லை.

பெருஞ்சித்திரனார் ஒரு சிறந்த புலவர்; குமணனைப் பாடிப் பரிசில் பெற்றவர். அவர் தம் வீட்டு வாழ்க்கையைச் சில பாடல்களில் சித்திரித்துக் காட்டுகின்றார். அவற்றின் மூலம் புலவர் வறுமை ஓரளவு விளங்கத்தான் செய்கின்றது. ஒரு பாட்டில் அவர் மனக்கிழத்தி வீட்டில் உணவற்ற காரணத்தால் வாடி உழக்கும் அல்லலையும், அவளிடைப் பால் உண்ண விரும்பியும் பால் கிடைக்கப் பெறாத காரணத்தால் வருந்தி அழும் குழந்தையின் நிலையையும், குப்பைக் கீரையைக் கொய்து வந்து உப்பின்றி அவித்து உண்ணும் நிலையையும், மாசடைந்த கிழிந்த ஆடையின் அவலத்தையும் கூறி, அந்தத் துன்பங்களைக் காணச் சகியாது தாம் குமணனைக் கண்டு பொருள்தேட வந்ததாகக் கூறுகின்றார் அவர் மற்றொரு பாட்டிலே வீட்டில் உணவற்றமையின், பாலன் வறுமுலை சுவைத்த கொடுமையையும், உணவுண்ண உள்ளே சென்று பாத்திரங்களைத் திறக்க அவற்றுளெல்லாம் ஒன்றும் இன்மையால் வருந்திய நிலையையும், அக்குழந்தையின் பசிக் கொடுமையை மாற்றத் தாயானவள் சந்திரனைக் காட்டிச் சிரிக்க வைத்தும், அதனைப் ‘புலி புலி’ என்று காட்டி அச்சுறுத்தியும், நொந்து வாடும் வாழ்க்கையினையும் காட்டுகின்றார். அவர் வாய்மொழிப்படி கண்டு செல்லல் நலம்: