பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கவிதையும் வாழ்க்கையும்


'இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்தழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தன ளாகி' (புறம். 160)

தாம் வந்த வரலாற்றைக் கூறுகின்றார் பெருஞ்சித்திரனார் இதைப் போன்ற பாடல்கள் பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன. புலவர்கள் மன்னரைப் பாடிப் பரிசில் கேட்பதற்கும் பெறுவதற்குமாகப் பரிசில் நிலை போன்ற பல துறைகளும் புறப்பொருள் இலக்கணத்தில் இருக்கின்றன. இவைகளை யெல்லாம் வைத்துக்கொண்டுதான் புலவர்கள் வாழ்க்கையில். வெற்றி பெறவில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் அவ்வாறு வறுமையில் வாடக் காரணம் என்ன? அந்த வறுமையை வறுமை என எந்த இலக்கியமாவது காட்டுகின்றதா? எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும்.

வாழ்க்கையின் வெற்றி, பொருள் ஒன்றினாலேதான் நிறைவுறும் என்று பலர் நினைக்கின்றனர். அந்த அடிப்படை எண்ணமே முதலில் தவறாக முடிவதாகும். அது உண்மையானல், எத்தனையோ செல்வர்கள் வாழ்வில் அல்லலும் அவதியும் உறுவானேன்? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வேறோன்றைச் செல்வமென்று குறிப்பானேன்? வள்ளுவர் பலவிடங்களில் பலவற்றைச் செல்வமென்பானேன்? ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’, ‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்’, ‘அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்’ என்பன போன்ற தொடர்கள் நமக்கு எதை விளக்குகின்றன? செல்வம் என்பது வெறும் பணத்தால் கணக்கிடுவது மட்டுமன்று. அதனினும் மேம்பட்ட ஒன்று: என்பது புலனாக வில்லையா? மேலும், ஆண்டவனைப் பாடுகின்ற இராமலிங்கர் போன்ற அடியவர்கள், ‘நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்’ என வேண்டுகின்றார்களே யன்றி, ‘பெருஞ்-