பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கவிதையும் வாழ்க்கையும்


மனையறத்துக்கு ஏற்றதாகத்தான் அந்நென் மலை அமைந்திருக்கும். எனினும், அதைப் பெற்ற பரவையார் தமக்காகவே அதை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அந்த ஊரில் உள்ள வரை யெல்லாம் ‘வருக’ என்று அழைத்தார்; அவரவர் தம், தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வகையில் நெல்லைத் தத்தமது இல்லத்திற்குக் கொண்டு செல்லப் பணித்தார். தமக்கென வந்ததைப் பொதிந்து மூடி வையாது, வல்லாங்கு வாழ்தும் என்னது, எல்லோர்க்கும் வழங்கும் பரவையாரின் பன்பை,


“வன்றொண்டர் தமக்களித்த நெற்கொண்டு மகிழ்சிறப்பார்
‘இன்றுங்கள் மனஎல்லைக் குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்றங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்க.’ என
வென்றிமுர சறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்.”
(ஏயர்கோன், 28)

என்று சேக்கிழார் அழகாகப் பாராட்டுகின்றர். ஆம் பரவையார் வெற்றி முரசு ஆர்த்தார்! அவர் வாழ்வு வெற்றி பெற்றதென்பதில் ஐயமுண்டோ? இவையெல்லாம் கதைகள் போலக் காணப்படினும், பாடும் கவிஞர் உள்ளத்தைக் காட்டு வனவாக அமைகின்றன அல்லவா! இவ்வாறு வாழ்வில் வெற்றியும் வீறும் பெற்ற புலவர் பலர். அவர்களை வாழ்வில் தோற்றவராகவும், வறுமையில் வாடியவர்களாகவும் காட்டுதல் பொருத்தமற்றதாகும். உண்மையிலே வறுமையில் வாடிய காலத்திலும் வெற்றிச் சிகரத்தின் உச்சியிலிருந்து வழுவாத பல கவிஞர்களும் நமக்குச் சங்க இலக்கியத்தில் காட்சி தருகின்றார்கள்.

உண்டுடுத்து வாழும் வாழ்க்கை ஒன்றையே கவிஞர்கள் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு வாழவில்லை. அப்படி வாழ்ந்திருப்பார்களாயின், ஒரு வேளை அவர்கள் தோல்வியுற்றிருக்கவும் கூடும். அவர்கள் கவிப்பண்பும் அதற்கு அவர்கள் தந்த ஏற்றமுமே அவர்கள் வாழ்வினும் மேலானவையாய் விளங்கின. பொருள் மட்டும் கருதி அவர்கள் கவி புனைந்திருப்பார்களாயின். ஏதோ அரசர்கள் கண்டும்