பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

91



காணுமலும் தந்தவற்றைப் பெற்றுக்கொண்டு சென்று காலம் கழித்திருப்பார்கள். ஆனல், தங்கள் கவிப் புலமையைக் கண்டு நாடாளும் மன்னர் போற்றவேண்டுமென்பதே அவர்கள் விருப்பம். மேற்கண்ட பெருஞ்சித்திரனரே இந்த நிலை வாழ்வுக்கும் இலக்காகி நிற்கின்றார்.

பெருஞ்சித்திரனார் ஒருகால் அதிகமானைக் காணச் சென்றார், அதிகமான் புலவர்களை ஆதரிக்கும் சிறந்த பண்பாளன்தான். ஆயினும், அப் புலவர் சென்ற காலத்து வேறு ஏதோ அவசரப்பணியில் அவன் ஈடுபட்டிருந்தான் போலும்! எனவே அவரைக் காணாது, அவர் ஏதாவது பரிசில் பெறத்தான் வந்திருப்பார்', என்று கருதித் தன்னிடம் வந்து அவர் வருகையைச் சொன்னவர் மூலமே பரிசில் கொடுத்தனுப்பினானாம். ஆனால், புலவர் அந்தப் பரிசிலை ஏற்க மறுத்து விட்டார்; தாம் வெறும் பொருளுக்காக அவனைக் காண வரவில்லை என்பதை விளக்கினர். மேலும், ஏதோ பாட்டுப் பாடி, அதற்குப் பதிலாகப் பணம் பெற்றுச் செல்லும் வாணிகப் புலவன் யான் அல்லேன், என்றும் எடுத்து விளக்கினார்.


“குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனன் பரிசில் கொண்டனன் செலற்கென
நின்ற என்னயந் தருளி ஈதுகொண்டு
ஈங்கனஞ் செல்க தான்என என்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்?
கானா தீத்த இப்பொருட்கு யான்ஒர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்: பேணித்
தினையனைத் தாயினும் இனிதுஅவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே. ”
(புறம். 208)


என்ற பாடல் அவர் வெற்றி முரசாய் எழுந்தது. அதைக் கேட்டு அதிகமான் பின்னர் வந்து, நேரிலே கண்டு அழைத்துச் சென்று. அருஞ்சிறப்புக்கள் செய்து போற்றியிருப்பான் என்பது கூறவும் வேண்டுமோ? இதைப்போன்றே அப் புலவர், இளவெளிமான் புலமை அறியாது சிறிது கொடுப்பக் கொள்ளாது நீங்கிய வரலாறும் புறநானூற்றில் உள்ளது.