பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கவிதையும் வாழ்க்கையும்


‘முற்றிய திருவின் மூவராயினும், பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலம்!’ என்று வீறு தோன்றக்கூடிய பெருந்தலைச்சாத்தனர் போன்ற புலவர்தம் வாழ்வில் வெற்றி கண்டதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றனவே! இவற்றையெல்லாம் கொண்டு புலவர் வாழ்வில் வெற்றி பெற்றவர் என்று சொல்வதல்லாது வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வாறு பொருள்பெறு வாழ்வுதவிர, மற்றவற்றிலுமே கவிஞர் வெற்றி கொண்டவர்தாம். அமைதியான இன்ப வாழ்வு அவர்களுடையது. அரசியலும் பிறவும் அவருக்குப் பழக்கமானவைதாம். எனினும், அவற்றுள் மூழ்கி அல்லலுற்று அமைதியை இழக்கும் வெறிபிடித்த வாழ்வு அவர்களுடையதன்று. ஆங்கில நாட்டுப் பெருங்கவிஞர் கோல்டுஸ்மித்து (Goldsmith). என்பார் தம் வாழ்வின் வெற்றியைப்பற்றி எக்காளமிட்டுப் பாடியதை அறியாதார் யார்? ‘நான் காண்பவற்றுக்கெல்லாம் நானே தலைவன்’[1] என்று அவர் உலகனைத்தையும் தம் அடிமைக் கீழ் அமைத்துக்கொண்ட பெருமிதம், கவிஞர் கண்ட வெற்றிப் பெருமிதமல்லவோ!

இந்த வெற்றிக்குக் கடல் கடந்த ஆங்கில நாடுவரை செல்ல வேண்டா. நம் நாட்டிலேயே இத்தகைய வெற்றியைக் கொண்டவீரக்கவிஞர் இல்லையா? ஏன் இல்லை? கம்பரைப்பற்றி வழங்கும் ஒரு கதை அவர் வீறு பெற்ற சிறப்பை நமக்கு நினைப்பூட்டும் என்று நினைக்கிறேன். ஒரு சமயம் சோழப் பேரரசனேடு கம்பர் தனிமையில் தங்கியிருந்தார். சோழன் தன் பரந்த பெருநாட்டைக் கண்டு இறுமாப்பு எய்தினானோ, அன்றிப் பெருமகிழ் வெய்தினானோ நாமறியோம்! தனது நாட்டைப்பற்றி எண்ணிய அவன், கம்பரை நோக்கி, ‘கவிஞர் பெருமானிர்! இப்பரந்த நாடும், இந்நாட்டில் உள்ள உயிர்ப் பொருள்களும், பிறவுமாகிய அனைத்தும் எனக்கு அடிமைப்பட்டிருப்பது எவ்வளவு பெருமையாய் இருக்கின்றது பார்த்தீர்களா?’ என்று கூறினன். அதைக் கேட்ட கம்பர் என்ன எண்ணினாரோ? உண்மையில், ‘அரசன் இவ்வாறு


  1. 1. ‘I am the monarch of all I survey’