பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

93


தருக்குவது தகாது. இதற்கு முடிவு கட்ட வேண்டும்,’ என்று கருதியோ, அன்றி மன்னவர் எத்துணைப் பெரியராயினும் கவிஞருக்கு அடக்கந்தான் என்பதை எடுத்துரைக்கவோ, அன்றி வேறு எண்ணியோ, அதற்கு ஒரு பதில் சொல்லிவிட்டார். அவர் கூறியது இதுதான்: ‘ஆம், அரசரே! மன்னர் மன்னரே! இப்பரந்த சோழப் பெருநாடு உங்களுக்கு அடிமை என்பதும், நீங்கள் எனக்கு அடிமை என்பதும், ஐயத்துக்கு இடமின்றி நன்கு விளங்குபவைதாமே!’ என்றார். பின்னர்க் கதை செல்கின்றது. அது கேட்ட மன்னன் சினந்து, ஒரு பெண்ணின்வழிக் கம்பரை அவமானப்படுத்த முயன்றதும், அதிலும் கம்பர் வெற்றி கண்டு, வேற்று நாடு சென்று, மற்றோர் அரசனைத் தம் பணியாளனாக் கொண்டு வந்ததும் கதையாய் வளர்கின்றன. கம்பர் அரசனைத் தமக்கு அடிமை என்று கூறும் அந்த அளவு வாழ்வில் வெற்றி பெற்ற புலவர் என்பதை எண்ணின், மகிழ்ச்சி தோன்றுகின்றதன்றோ! இறுதியில் சோழன் கம்பரின்றித் தனித்துயரெய்தி, எங்கிருந்தாலும் அவரைக் கொண்டுவரப் பணித்து, உண்மையில் அவருக்கு அடிமை போலவே வாழ்ந்தான் என்றுதானே கதை முடி கின்றது?

சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் போன்ற கவிஞர்களும் தத்தம் கவிதைத் துறையினால்தானே மன்னவரும் மதிக்கும் வகையில் வெற்றி மாலை சூடி வாழ்ந்தனர்? ஔவையார், வாழ்வில் எப்படி வாழ்ந்தார் என்று காண இயலாவிட்டாலும், அதிகன் தனக்கென வைத்திருந்த அந்த நெல்லிக்கனியை அவருக்குக் கொடுத்ததன் மூலம் அவர் வெற்றி வாழ்வை மேற்கொண்டிருந்தார் என்பது புலனாகின்றதே! நெடு நாள் நினைத்திருந்து பெற்ற, பல்வகைச் சிறப்புக்கள் பொருந்திய, உண்டால் நெடுங்காலம் வாழவைக்க வல்ல, அந்தச் சிறியிலை நெல்லித் தீங்கனியைத் தான் உண்ணாது அதிகன், ஔவையார் என்னும் கவிஞருக்குக் கொடுத்தான் என்றால், அது ஔவையாரின் வெற்றியையன்றோ குறிக்கின்றது! ஆனால், அவர் கொண்ட கவி நலன், அவ்வெற்றியில் தம்மை மறவாது தொடுத்த அதிகனைப் பாட வைக்கின்றது.