பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

79


போற்றியது நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர் அத்தனை பெரிய திருமண மண்டபத்தில் அப்போது பாராட்டியதை வங்காளிகள் உணரவில்லை.

ஆனால், ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், லண்டன் நகரத்தவர்களும் தாகூரைப் பாராட்டிப் பரிசு கொடுத்துப் போற்றிய, பிறகுதான் வங்காளிகள் அவரது அருமையை அறிந்து பெருமை கொண்டார்கள். அதுவரை அலட்சியப்படுத்தியே வந்தார்கள்.

வங்காள மொழியில் பழுத்த புலவர்கள், தாகூரின் பாட்டுக்களையும், எழுத்துக்களையும் குறை கூறி கிண்டலடித்தார்கள். அவர் இலக்கணம் அறியாதவர் என்று இகழ்ந்து எழுதினார்கள். மாணவர்கள் எழுதும் வினாத்தாள்களில், ‘பிழை திருத்துக’ என்ற தலைப்பின் கீழ், தாகூரின் நூல்களில் கண்ட வரிகளைக் கொடுத்து எழுத வைத்தார்கள்.

தாகூரின் வாக்கியங்கள் தவறானவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்ற தப்பான பிரசாரத்தைச் செய்தார்கள். ஆனால், அதே புலவர்கள் தாகூர் நோபல் பரிசு பெற்ற பிறகு ஊமைகளாகி விட்டார்கள்.

கல்கத்தா பல்கலைக் கழகம் தாகூரைப் பாராட்டியது. கல்லூரியில் பட்டம் பெறாத அவருக்கு 1913-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமை கொண்டது. அதற்குப் பிறகு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ரவீந்திரரை பட்டமளிப்பு விழா உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டது.

டாக்டர், கவிஞர் இரவீந்திர நாத் தாகூர் அந்த அழைப்பை ஏற்று, தன் தாய்மொழியான வங்காளத்திலேயே பட்டமளிப்பு