உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. திருநெல்வேலி வட்டத் தொட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் இரசிகமணியின் நெருங்கிய நண்பர்களுக்கு எழுதியது.

2. உறவினர்களுக்கு எழுதியது.

3. பிற அமைப்புகளுக்கும். அரசாங்கத்திற்கும் எழுதியது.

இத்தகைய கடிதங்களில் கலை, இலக்கியம், கவிதைகள். அறிவியல். சோதிடம். மருத்துவம், ஆன்மீகம், நட்பு எனப் பல தரப்பட்ட செய்திகளை விளங்கச் செய்து. இதயத்திற்கு இதமளித்து. மனத்திற்கு உற்சாகம் ஊட்டியுள்ளார்.

டி. கே. சி. யின் கடிதங்களிலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் எழுத்திலும் பொருள் முட்டித்ததும்பிக் கொண்டு நிற்கும். அபாரமான தெளிவும், உணர்ச்சியும். ஒளியும் இருக்கும். வெறும் கொச்சைப் பேச்சை வைத்துக் கொண்டு இந்த மாதிரி மாய வித்தைகள் செய்துவிட முடியாது. ஆண்டுக் கணக்கிலே பேச்சுத் தமிழின் உயிர்நிலையை அறிந்து. அனுபவித்து, அந்த அனுபவத்தால் பெற்ற மொழியறிவைக் கலைப் பாங்கோடு கையாளக் கற்றுக் கொண்டதால்தான் டி. கே. சி.யினுடைய எழுத்துத் தமிழுக்கு. பேச்சுத் தமிழின் இயல்பான சீலமும் வன்மையும் உயிர்த் துடிப்பும் கிட்டியுள்ளன.

டி.கே.சிக்கு ஒரு பருவத்தில் மூச்சுவிடுதல் போல் கடிதம் எழுதுவது தேவைப்பட்டுள்ளது. தனிமையில், உறக்கம் வராத நிலையில் கடிதம் எழுதி, மனநிறைவு பெற்றதைப் பின்வரும் கடிதப்பகுதி உணர்த்தும்.

"என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லாருமாக நேற்றுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். தங்கள் அண்ணியும் குற்றாலமும் ஆழ்வார் குறிச்சிக்குப் போயிருக்கிறார்கள். தங்கம் தென்காசி: ஆகவே, நான் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று, சிவமே என்றிருக்கிறேன். பலராமும் துணைக்கு இருக்கிறார். அருவிச் சத்தம் ஒன்று மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.30"

நட்பிற்குப் புத்துயிர் ஊட்டி நண்பர்களுக்கு எழுதிய கடிதம்

நீதிபதி எஸ். மகாராசனுக்குப் பத்து அல்லது இருபது பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதங்களைக் குற்றாலத்தில் இருந்து கொண்டு இரசிகமணி எழுதினார். உடனுக்குடன் பதில் கிடைக்கவில்லை என்பதனை (21-09-1949இல்) அவரெழுதிய மற்றொரு கடிதம் புலப்படுத்துகிறது.

"கள்ளுக் கடைகளை அடைத்துவிட்டார்கள். ஆனால், அன்பைப் பகிஷ்கரிக்கவில்லை. கம்பர் சொல்லுகிறபடி. கள்ளும் அன்பும் ஒரே தன்மையானவைதான். அவைகளுடன் பழகுவது பிசகு, விடமுடியாத பழக்கமாய் விடுகிறது. சீவில்லிபுத்தூரிலிருந்து கடிதம் வந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாத பக்ஷம் நாள் வெறித் தோடிப் போகிறது. ஆனால் ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும்"

காகிதச்சுவடி ஆய்வுகள்

169