உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியன மூலச் சுவடியோடு. தாள் சுவடிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பதிப்புகளை வெளிக்கொணருகின்றன.

சித்தர்கள் என மக்களால் போற்றப் பெற்ற இப்பெரியோர்கள் இரசவாதம் நோக்கித் தங்கள் ஆய்வைச் செலுத்திய போது அவர்களுக்கு உபரியாகக் கிடைத்ததே இம்மருத்துவப் பட்டறிவு. ஆயினும். தமிழில் மருத்துவத் துறைக்கு மூல நூல்களைத் தந்த பெருமை இவர்களையே சாரும். கீழ்த் திசைச் சுவடி நூலகத்தில் இப்பெரு மக்கள் சொன்ன பல்வேறு நூல்கள் இன்னும் தாளில் உறங்கிக் கொண்டே கிடக்கின்றன. அவையாவும் வெளிவரின் சித்தர்களின் மருத்துவ ஞானத்தை உலகறிய வாய்ப்பாகும். அனுபவ வைத்தியம்

மருத்துவம் என்பது உடம்பில் ஏற்படும் நோய்களுக்குத் தீர்வுகாணும் ஒரு கல்வியாகும். இதனை நம் முன்னோர்கள் சித்தர்கள் வாயிலாக அறிந்து கொண்டனர் என்பர். இருப்பினும் இத்துறை தற்போது மூவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். அஃதாவது நிறுவன வாயிலாக முறையாக மருத்துவக் கல்விகற்ற மருத்துவர்கள் என்ற ஒரு சாராரிடமும். பாரம்பரியமாக மூலிகைகளோடும் அவை ஆற்றும் மருத்துவச் சிகிச்சையோடும் காலம் காலமாகத் தொடர்புடைய பாரம்பரிய மருத்துவர்கள் என்ற கல்விசாரா மருத்துவர்களிடமும். மேற்சொன்ன இருவர் கூட்டத்திலும் பணியாளராகவோ அல்லது பிணியாளராகவோ இருந்து தாம் கண்டு கேட்டு உய்த்து உணர்ந்த பட்டறிவைக் கொண்டு தன்னை ஒரு மருத்துவனாகக் கருதிக் கொள்ளும் மருத்துவப் பட்டறிவாளனான அனுபவ வைத்தியர் என்பாரிடமும் ஆகிய இம்மூவரிடமே மருத்துவத் தொழில் நிலை பெற்றுள்ளது. இப்படிப் பார்க்கும்போது முறை சார்ந்த கல்வி வாயிலாக வந்த பட்டறிவாளர்கள் 'மருத்துவர்' என்ற பெயரிலும். ஏனையோர் அனுபவ வைத்தியர்' என்ற பெயரிலும் மக்களிடையே செல்வாக்குப் பெறலாயினர்.

அவ்வகையில் அனுபவ வைத்தியம் என்ற பெயரில் இந்நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தாள் சுவடிகள் உள்ளன. இச்சுவடிகள் பெரும்பாலும் ஒரு பெருந்தலைப்பில் பல்வேறு நோய்களுக்கான மருந்து செய்முறைகளையும் மருத்துவ முறைகளையும் எடுத்தியம்புவனவாக அமைகின்றன. இதையறிந்தவர் (மருத்துவர்! இம்மருந்து செய்யும் முறை. மருத்துவ முறை ஆகியனவற்றை யாரிடமிருந்து கற்றுக் கொண்டார் அல்லது தெரிந்து கொண்டார் என்ற விவரத்தைச் சுவடிக் குறிப்பாகத் தருவதில்லை. அதே போன்று தன்னைப் பற்றிய தற்குறிப்பையும் தருவதில்லை. இதன் காரணமாக இவ்வகையான மருத்துவக் குறிப்புகள் பிறர் பயன்பாட்டிற்குத் தரவுகளாக அமையாமலேயே போய்விடுகின்றன.

தமிழாய்வு செய்யும் நிறுவனங்கள் கூட இவ்வகையான சுவடிகளை ஆய்வுக்கோ அல்லது பதிப்பிற்கோ பெரும்பாலும் உட்படுத்திக் கொள்வதில்லை. ஆயினும். தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனங்கள் இன்று இத்தகைய தாள் சுவடிகளின் அருமை பெருமை கருதிப் பாடல் வடிவம் என்றாலும் சரி அல்லது உரைநடை வடிவம் என்றாலும் சரி வேற்றுமை கருதாது நூல் சொல்லும் கருத்துக்கு முக்கியத்துவம் தந்து பல்வேறு மருத்துவ நூல்களைப் பதிப்பித்து வருகிறது. சென்னைக் காகிதச்சுவடி ஆய்வுகள்

283