உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கம்பனது புலமைத்திறனைப்பற்றித் தனித்தன்மை மிக்க சில கட்டுரைகளைப் படைத்துள்ளார் காகிதச்சுவடியில் எழுதப்பட்ட அச்சு வடிவம் பெறாத அவருடைய கம்பனது நுட்பவுணர்வு கட்டுரைத் தொகுப்பின் சுவைமிக்க சில விளக்கங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

அயோத்தி நகர மக்களின் கல்விச் சிறப்பினைக் கூறவந்த கம்பன்.

"கல்லாது நிற்பார் பிறரின்மையின் கல்வி முற்ற வல்லாரு மில்லை அவை வல்லர் அல்லாரு மில்லை"

என்று குறிப்பிடுகின்றார்.

(பால. நகர. 74)

அயோத்தி நகரில் யாவரும் கற்றவரே என்று கம்பன் கூற விரும்புகின்றான். அப்போது கல்லாதார் இன்மையின் என்று கூறினாலே அவன் கூறவிரும்பும் பொருள் அமைந்து விடும். ஆயினும். கல்லாது நிற்பார் பிறரின்மையின் என்று பிறர். நிற்பார் ஆகிய சொற்களைச் சேர்த்துக் கூறியதில் மிகுந்த நுட்பத்தைச் சிங்காரவேல் சேதிராயர் காணுகின்றார்.

பிறர் என்பது மற்றையோர் எனப் பொருள்படுவது. அது முன்னர்க் கருதியார்க்கு எதிர்நிலையில் நிற்பாரைக் குறிப்பதாகும். ஈண்டுப் பிறர் என்பது கற்றாரின் நீங்கிய இல்லார் எனப்படுதலை நாம் உணர்தல் வேண்டும். அங்ஙனமாகக் கல்லாதார் என்றே கூறி ஒழியாது 'பிறர்' என்னும் சொற்கொண்டு கல்லார் என்பது உணருமாறு கூறியது. கல்லார் எனப்படுவோரைக் கற்றாரின் நீங்கிய பிறர் எனக் கூறப்படுவதில் பொருட்சிறப்பு உள்ளது.

வள்ளுவர்.

கல்லார்க்கும் கற்றார்க்கும் உள்ள வேறுபாட்டினை உணர்த்த வந்த

"விலங்கொடு மக்கள் அனையா இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்" (குறள். 410)

என்கிறார். ஈண்டு கற்றாரோடு கல்லாதார் என்னாது கற்றாரோடு ஏனையவர் என்றது யாது கருதியோ? பெரியார் எனப்படும் சொல் நற்பண்புகள் நிறையப்பெற்ற மக்களையும் சிறியார் எனப்படும் சொல் நற்பண்புகள் குறையப் பெற்ற மக்களையும் குறிக்கும் வகையில் அமைந்த மறுதலைச் சொற்கள். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்னும் குறள் குணம் குறைந்தவரும் மக்கள் இனத்தைச் சார்ந்து நிற்பவரே என்பதனைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்துவதே எனவே மறுதலைச் சொற்களால் குறிக்கப்பெறும் ஓரினஞ்சார்ந்த பொருள்கள் தம்முன் ஏற்றத் தாழ்வுடன் ஒன்றனை ஒன்று சார்ந்து நிற்பனவாகவே கருதப்படலாம். மேற்காட்டிய குறளில் 'கற்றாரோடு ஏனையவர் என்னாது கற்றாரோடு கல்லாதார் எனக் கூறியிருப்பின் முன்பு கூறியவாறு கற்றாரும் கல்லாரும் ஏற்றத்தாழ்வுடன் ஓரினம் சார்ந்தவராகவே கருதப்படுவர். அவ்வாறு கொள்ளும்போது அவர் விலங்கொடு மக்களனையர் எனும பிறப்பினால் ஒவ்வாத விலங்கினை உவமையாகக் காட்டல் பொருந்தாது. ஆகலான் 'கற்றாரோடு ஏனையவர்' என்றார். ஏனையவர் என்ற சொல் மற்றவர் பிறர் என்னும் பொருள்பட நிற்பது. இதனால் கற்றாரோடு முரண்பட்டார். காகிதச்சுவடி ஆய்வுகள்

346