உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சி. பங்கயச்செல்வி

தேர்வு நிலை விரிவுரையாளர்

தமிழ்த்துறை

ஸ்ரீ கா. சு. சு. கலைக் கல்லூரி திருப்பனந்தாள்

நில அளவையியல் ஆவணங்கள்

முன்னுரை

அரசர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் உத்தரவுகளைத் தாங்கி வந்தவை சாசனங்கள் எனப்பட்டன. சாசனம் என்பது வடசொல், இஃது கட்டளை அல்லது உத்தரவு என்று பொருள்படும். அக்கால மக்கள் அளித்த தானங்களைப் பற்றித் தெரிவிப்பதும் சாசனங்களாயின. தொடக்க காலத்தில் கோயில்களுக்கும் புலவர் முதலியோருக்கும் கொடுக்கப்பட்டவை நில தானங்களைக் குறித்தன. பின்னர் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட எல்லாத் தானங்களையும் குறிக்கவும், நிலங்களைக் கிரயம் செய்யவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாசனங்கள் தங்கம், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களால் எழுதப்பட்டாலும் பெரும்பாலும் கல்லில் வெட்டப்பட்டன. அவை கல்வெட்டுக்கள். சிலாலேகை, சிலாசாசனம் என்று வழங்கப்பட்டுள்ளன. அரசன் ஆணையைத் தாங்கி வந்தவை செப்புப் பட்டயம். செப்பேடு. தாமிரப் பட்டயம். தாமிர சாசனம் என்றும் அழைக்கப்பட்டன.1

ஆவணங்கள்

நிலங்கள் தொடர்பானவை ஊர்ச் சபையால் நிகழ்த்தப் பெற்றன. ஊர்ச் சபை அரசனின் மேற்பார்வையின் கீழ் இயங்கியது. வரி விதிப்பு, வரி வசூல், நில விற்பனை ஆகியவை அச்சபையால் கண்காணிக்கப்பட்டது. சபை உறுப்பினர்கள் முன்னிலையில் விலை உறுதியானவுடன் ஓலையில் நிலம் பற்றிய விவரம், நில மதிப்பு. விலையை ஏற்றுக் கொண்ட தகவல் ஆகிய அனைத்தும் எழுதப்பெற்றுச் சபையோரால் கையொப்பம் இடப்பெற்றது. இஃதே ஆவணம் அல்லது பத்திரம் ஆகும். மூல ஓலைக்கு நகல் எடுக்கப்பட்டு படியோலை உருவானது. மூல ஓலை ஊர்ச்சபையிடமும் நகல் ஓலை நில உரிமையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து மூல ஓலைகளையும் ஊர்ச் சபையே சேமித்துப் பாதுகாத்ததால் ஆவணக் காப்பகமாகச் செயல்பட்டது.

1. வ.தங்கையா நாடார். தென்னிந்தியத் தமிழ்ச் சாசனங்கள், ப. 7.

காகிதச்சுவடி ஆய்வுகள்

83