பக்கம்:காகித உறவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

15


காளிமுத்துவுக்கு ஒன்று ஒடவில்லை. இந்தத் தொழிலைத் தவிர எந்தத் தொழிலையும் அவனால் செய்ய முடியாது. மாவட்டக் காய்ச்சும் 'அதிகாரி'யும் அவனை, மீண்டும் தன் டிபார்ட்மெண்டுக்குள் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார். இனி பொறுப்பதில் நியாயமில்லை. என்ன வந்தாலுஞ் சரி... மூர்த்திப்பயலை, தீர்த்துக் கட்டியாக வேண்டும். ஒரே வெட்டாக வெட்டியாக வேண்டும். தலைவேறு... முண்டம் வேறாக ஆக்கியாகி வேண்டும்.

'வேலையை' முடிக்க, ஆட்களை அமர்த்துவதற்கு முன்னதாகவே, போலீஸ் நிலையத்தில் இருந்து, காளிமுத்துவுக்கு அழைப்பு வந்தது. போனான். சப் இன்ஸ்பெக்டர் எரிந்து விழுந்தார்; காளிமுத்து, தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், தனக்குத் தக்க பாதுகாப்பு அளிக்கும்படியும் கலெக்டரிடம் "கிரீவ்வன்ஸ்டே'யில் (மனுநீதி திட்டநாள்) மூர்த்தி கொடுத்திருந்த விண்ணப்ப மனுவை, அவனிடம், காட்டினார். "மூர்த்தி மேல. ஒரு சின்னக்காயம் ஏற்பட்டாலுஞ் சரி... ஒன் முதுகிலே. பெரிய காயம் ஏற்படும். ஜாக்கிரதை' என்று சப் இன்ஸ்பெக்டர், அவனைத் திட்டினார். லேசாகத் தட்டிக்கூடப் பார்த்தார். அவனை... எவன் தாக்கினாலும். நீ தாக்கியதாய்க் கருதப்படும்" என்று தாக்கீதும் கொடுத்தார்.

இப்போது, மூர்த்திக்கு, வேறு விரோதத்தில், வேறு எவனும் 'சின்னக்காயங்' கூட விளைவிக்காமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காளிமுத்துவுக்கு வந்துவிட்டது. ஏற்கெனவே, மூர்த்திமீது, இன்னொரு 'ஏரியா' ஆசாமிகள் குறி வைத்திருப்பது தெரிந்ததும், அவர்களின் காலில் விழாக் குறையாக விழுந்து அழாக் குறையாக அழுது அவர்களைத் தடுப்பதற்குள் காளிமுத்துவிற்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

இதற்கிடையே போலீஸ்காரர்கள், 'ரெய்ட்' பண்ண வரப்போவதாக, காளிமுத்துவுக்குத் தகவல் வந்தது. இந்தத் தொழிலை எப்படிவிட முடியும்? இந்தச் சண்டாளனை, எப்படிச் சமாளிக்க முடியும், என்ன பண்ணலாம். ஒரே ஒரு வழிதான். காளிமுத்து வெளியூருக்குப் போய்விட்டு வந்தான். அங்கே... தொழில் சகாவின் காதைக் கடித்து விட்டு, ஊருக்குத் திரும்பினான். இதிலாவது வெற்றி கிடைக்குமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/17&oldid=1383412" இலிருந்து மீள்விக்கப்பட்டது