பக்கம்:காகித உறவு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பிறக்காத நாட்கள்


 அரைமணி நேரம் ஆயிற்று.

காத்தாயியின் எஜமானியம்மாவின் பங்களா வராந்தாவின் எட்டில் ஒரு பகுதி பரப்பளவுகூட இல்லாத அந்த குடிசையில், வாசலில் தலையை வைத்துக் கொண்டு முனுசாமி தொலை துரத்தை நோக்கிக் கொண்டிருந்தான். கன்னத்தின் வழியாக வடிந்த கண்ணீர் அங்கே சிறிது தேங்கி வண்டல் மண்போல் படிந்திருந்தது. அம்மாவிடமிருந்து பிறந்த நாள் அடிகளை வாங்கிய நிகழ்ச்சிகளையும். பங்களா குமாருக்கு பலர் கொடுத்த பரிசுகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தானோ என்னவோ... எதையாவது கொளுத்த வேண்டும் என்று நினைத்தானோ என்னமோ. உலகம் புரிந்துவிட்ட விவேகத்திற்கு அச்சப்பட்டு. அப்படி இருந்தானோ என்னமோ கரங்களை மார்பில் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டுக்கொண்டு, ஏதோ ஒன்று புரிந்தது போலவும், புரியாதது போலவும், ஒரு கண் புருவத்தை மேலே தூக்கி இன்னொரு புருவத்தை கீழே சாய்த்து எதையோ சாய்க்கப் போகிறவன் போல் உட்கார்ந்திருந்த அவனருகே-

காத்தாயி போனாள். அவன் தலையைக் கோதி விட்டாள். அம்மாவின் நிலையைப் புரிந்து கொண்டவன் போல் அந்த ஒன்பது வயதுப் பையன், அவள் அப்படி தலையைக் கோதிவிட அனுமதித்தபோது, காத்தாயியின் கண்கள் மேற்கொண்டும் நீரை தங்களிடம் இருக்க அனுமதிக்கவில்லை. அவள் கண்ணிர் முனுசாமியின் பரட்டைத் தலையை ஈரமாக்கியபோது, காத்தாயியால் பேசாமலும் விம்மாமலும் இருக்க முடியவில்லை.

“என் ராசா... நம்பள மாதிரி ஏழைங்க... பொறந்த நாளுக்காவ சந்தோசப்படக்கூடாது. அழனும்டா... நமக்கு பொறந்த நாள விட. பிறக்காத நாளுதாண்டா முக்கியம். கவலப்படாதடா என் கண்ணு. நமக்கும் ஒரு காலம் பொறக்கத்தான் போவுது. அது பிறந்தாதான் நாம பிறந்ததுல அர்த்தம் கீதுடா. அதுவரைக்கும் நீ பொறக்கலன்னு நென்சி. பொறுத்துக்கோடா. என் மவராசா."

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/68&oldid=1383315" இலிருந்து மீள்விக்கப்பட்டது