பக்கம்:காக்கை விடு தூது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4



வாம மயில்வைத்த வள்ளலுமொத் - தேமமாய்த்
தன்னினத்தை யெல்லாமூண் தானுண்ணும் வேளையில்
இன்னுரையா லேயழைத் தின்பூட்டித் - தன்னுடனே
ஒக்கவழைத் துத்தமிழர் ஒப்புர வீதென்னத்
தக்க செயலாற் றலைநின்று - மிக்கவைசெய்
தெந்நாட்டினுக்கும் இயற்கையின் முற்றோன்றும்
முன்னாடு தென்னாடாம் உண்மையும் - அந்நாடொட்
டிந்நாட்டா ரென்றும் இயம்பும் மொழிதமிழென்
றிந்நா நிலத்தோர் இசையவே - எந்நாளும்
அம்மா வெனவழைக்கும் ஆன்கன்றும் மற்றதனைத்
தம்மாசை ஊற்றொடரும் தாயும்பார்த் - தெம்மவர்கள்
ஆவி யுருகா ரணுவளவு மென்றவரை
மேவி வெகுளியான் மெய்கருவிப் - பாவியீர்
தேனேயுஞ் செந்தமிழைத் தீயவர்கள் தம்மொழியால்
வீணே சிதைக்க விரையுமுன் - ஆனாதிங்
காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிடுங் காக்கையே - மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைமைசேர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன் - ஆர்த்த
கடலுண் குறுமுனிவன் கையகத்துக் கொண்ட
குடநீர் தனைக்கவிழ்த்துக் கொட்டித் - தடமண்டு
காவிரியா றாக்கிக் கருணையாற் செந்தமிழர்
ஆவியளிக்கும் அருமருந்தே - தேவர்கோன்
வானுலகத் தன்னை வளர்த்திடுவா னாயினும் நீ
தானருள்நீ ராலே நகைபெற்றான் - தேன்போன்ற
வண்டமிழைக் காக்கும் மரபானும் மாநிலத்தோர்
அண்டங்காக் கையென்ன ஆயினாய் - மண்டு
நிறத்தைக் கருதாது நின்பெருமை நின்னை
யுறவே கருங்காக்கை யென்பர் - திறல்சேர்
கருமைநிறந் தானுங் கடவுளமைத் திட்ட
பெருமை யடையாளப் பேரே - உருவார்ந்த
பார்வதியும் மாலும் பகர்கருமை பெற்றதனால்
பேரழகும் ஆண்மையும் பெற்றுயர்ந்தார் - தேரின்
கருமுகிலும் மற்றுன் கருணைநிறங் காட்டி