பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அகப்பொருள் தத்துவம் ஆழ்வார் பாசுரங்களில் அகப்பொருள் பாசுரங்களுக்கு வியாக்கியானம் செய்த ஆசாரியப் பெருமக்கள் சங்க கால நெறியினை யொட்டி பிற்காலத் தத்துவ முறையைக் கலந்து ஓர் அகப்பொருள் நெறியினை அமைத்துக் காட்டியது போல் எந்த சமயத்தாரும் காட்டிற்றிலர். இந்த முறையை எளிமைப்படுத்தி நம் சுவாமிகள் தம் தீபிகையில் காட்டி யுள்ளார்கள். இம்முறையை விளக்குவதால் சுவாமிகளின் ஒப்புயர்வற்ற உள்ளப் பாங்கினைக் காட்டுவதாக அமையும். பரம்பொருளுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று சாத்திரங்கள் சாற்றுவதை எட்டெழுத்து மந்திரமும் குறிப்பிடுவதாக ஆசாரியப் பெருமக்கள் உரைத்து போயினர். இந்த உறவு முறையினை அறிந்து கொள்வதே சம்பந்தஞானம் என்பது. இதனை அறிந்து கொள்ளாததால்தான் ஆன்மாக்கள் நெடுங்காலமாக இறைவனை விட்டுப் பிரிந்து பிறவிக்கடலில் ஆழ்ந்து துன்புறுகின்றன. சர்வேசுவரனையும் நம்மையும் பொருத்தி வைப்பது இச்சம்பந்த ஞானமேயாகும். சம்பந்த ஞானம் உடையவர்களிடத்தில் சர்வேசுவரன் விரும்பியடைவன். ஆதலால் சம்பந்த ஞானம் ஈசுவரனையும் விருப்புறுத்து வதற்கு உரியதாகின்றது. இந்த ஞானமில்லாத பிறவி பயனற்ற பிறவியாகின்றது. இந்த ஒன்பது வகையான சம்பந்தங்கள் ஓர் ஆன்மாவுக்கும் பிறிதோர் ஆன்மாவுக்கும் வினைப்பயனால் நேரிடுகின்றது. இவை வினையின் தொடர்பு நீங்கும்போது மாறி விடுகின்றன.