பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோயாவாம் தீவினையே

127



செய்து வந்தேன். ஒய்வு நேரங்களில் காளப்பருடன் இருந்து, அவரை இனிய தேவாரத் திருவாசகப் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வேன். சில நாட்களில் இரவெலாம் பாட்டொலி கேட்டுக்கொண்டிருக்கும். அந்தச் சமய அடிப்படையிலேதான் என் வாழ்க்கையே அமைந்தது. ஆம்! நான் நம்பிக்கை அடிப்படையிலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். 'நம்பினார் கெடுவதில் நாலு மறை தீர்ப்பு' என்ற பாரதியார் வாக்கை முழுதும் நம்பினேன். இன்றும் நம்புகிறேன். அந்நம்பிக்கை வீண் போவதில்லை.

இந்த வாழ்க்கை வரலாற்றை நான் ஏர்க்காட்டில் என் குறிஞ்சி மனயில் எழுதிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உள்ளே ஊர்ப் பக்கம் செல்லுவேன். வழியில் உள்ள கிறித்துவக் கோயிலைக் கடந்தே செல்ல வேண்டும். அதன் உச்சியில் 'The Just Shall have Him on Faith' என்று எழுதப் பெற்றுள்ளது. அது எவ்வளவு உண்மை என்பது எனக்குப் புலனாகும். ஆம். நல்லவர் வாழ்வெல்லாம் அந்த நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து வளர்ந்தது தானே. எனவே நானும் அந்த நம்பிக்கை அடிப்படையிலேயே வாழ்வை அமைத்துக்கொண்டேன்.

கிறித்து பிறந்த நாளையும் ஆண்டுப் பிறப்பையும் போற்றிய வகையை மேலே காட்டினேன். அந்நாட்களில் தேவாரத்தில் கயிறு சார்த்திப் படிப்பதை மேலே கூறினேன். அதில் வரும் பாடல்கள் வழி. அந்த ஆண்டு நிகழ்ச்சியை அமைத்துக் கொள்வேன். வீட்டில் என் செல்வி மங்கை வளர்ந்து வந்தாள். அவளுக்கு மூன்று ஆண்டுகள் முடியும் நிலையில் எங்கள் உள்ளத்தில் 'மகன்' இல்லையே. என்ற குறை உண்டாயிற்று. முன்னவள் வழி இருந்த மகனும் மறைய, நம் குடிக்கு நல்ல மகன் தோன்ற வேண்டுமே என்ற எண்ணம் தலைதூக்கிற்று. அதுகாலையில்தான் கிறித்தவப் புத்தாண்டு தொடங்கப் பெற்றது. அந்த ஆண்டின் தொடக்க நாளில் நான் சம்பந்தர் தேவாரத்தில் கயிறு சாத்தி