பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

காஞ்சி வாழ்க்கை


‘பாரி காதை’ அப்போது அரங்கேறிற்று. அன்று வந்த அத்தனைப் பெரும்புலவரையும் பேரவையின் சார்பில் பாராட்டி, புகைப்படமும் எடுத்துக்கொண்டோம், அது இன்னும் என்முன் தொங்கவிடப் பெற்றிருக்கின்றது.

அந்த ஆண்டில் நான் பெற்ற மற்றொரு அனுபவம் என் தனி வாழ்வைப் பற்றியது. நான் மணம்புரிந்தும் துறவியைப் போல் வாழ்ந்தேன் என மேலேயே கூறினேன். இருதார மணத் தடுப்புச் சட்டம் இல்லாத காலம் அது. எனவே எனது அன்னையர் இருவரும் எனக்கு மறுமணம் செய்விக்க நினைத்தனர். நானும் அவ்வாறே நினைத்ததுண்டு. என்னை மணந்தாரை, அவர் விரும்பியவரையே மணக்க ஆவன செய்து, நானும் வேறொருவரை மணந்து கொண்டால் என்ன என்று எண்ணுவதுண்டு. அதற்கேற்ற சூழலோ என்னுமாறு ஒரு நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. வேறு துறையில் பயின்றவர் ஒருவர் அடிக்கடி என்னுடன் பேசி, பரிவுகாட்டிச் சென்றதை நான் தவறாக உணர்ந்துவிட்டேன் போலும். முயன்றால் அவர்களை மணக்கலாம் எனத் திட்டமிட்டேன். ஆயினும் இம்மணத்தை என் அன்னையாரோ மற்றவர்களோ ஒருசிறிதும் விரும்பமாட்டார்கள் என்பதை அறிவேன். என்றாலும் ஏனோ அந்த வாலிப உள்ளத்தில் அந்த எண்ணம் முகிழ்ந்தது. ஓரளவு முயற்சியும் செய்தேன். அவர்களும் இணங்கும் நெறியில் வந்தார்கள் என நான் கருதினேன். ஆனால் மணம் புரிந்துகொள்ளவேண்டும் என்ற என் கருத்தை எழுத்தில் தீட்டிய நாளிலிருந்து அவர்கள் போக்கு திசைமாறிவிட்டதால் நான் என் எண்ணத்தை அறவே விட்டுவிட்டேன். (பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து என் அன்னையர் விருப்பப்படியே உறவினர் ஒருவரை மணந்துகொண்டேன்.) எனினும் அவர்தம் பிற்கால வாழ்க்கையை நோக்கும்போது, ஒருவேளை நான் அடுத்த இரண்டொரு ஆண்டில் முயன்றிருந்தால் எண்ணம் நிறைவுற்றிருக்கலாம் என நினைத்ததுண்டு. நான் இடையில் பல்கலைக்கழகப் படிப்பை விட்டுவிட்டமையின் அவர்-