பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

காஞ்சி வாழ்க்கை


திரு. சுப்பிரமணிய ஐயர் அவர்களும் என்பால் அன்பு காட்டி வருகின்றனர். அவர்தம் அன்பால் ஐயர் அவர்கள் பெயரால் அமைந்த நூல் நிலையத்தில் ஆட்சிப்பொறுப்பின் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன்.

பல்கலைக் கழகத்துக்குப் படிக்கச் சென்ற நான்–நான்காண்டுகள் படித்து முடிக்காது–இடையிலே இரண்டாண்டில் விட்டுவந்த செயல் விநோதமானது. ஒரு ஆய்வுப் பொருளின் காரணமாக கொள்கை விளக்க அடிப்படையில் எனக்கும் எனது மதிப்புக்குரிய ஆசிரியர் கந்தசாமியார் அவர்களும் மாறுபாடு ஏற்பட்டது. எங்கள் தர்க்கம் சற்றே மிஞ்சிய நிலையில் துறைத்தலைவர் பாரதியாருக்கு எட்டியது. அவர்களுக்கு நான் எவ்வளவு வேண்டியவனாயினும் கல்லூரியில் தனிச்சலுகை கிடையாது. எனவே என்னை அழைத்துச் சற்றே வன்மையாகக் கண்டித்தனர். பிப்ரவரி மாத இறுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தச் சூழ்நிலையில் நான் மேலும் தொடர்ந்து பயில விரும்பவில்லை. எனவே அப்போது துணைவேந்தராக இருந்த சர். எஸ். இ. அரங்கநாதன் அவர்களை நேரில்கண்டு என் கருத்தைக் கூறினேன். பலவகையில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் தொடர்பு கொண்டவனாதலின் என்னை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். என்னை மறுநாள் வரப் பணித்தார்கள். பிறகு பாரதியாருடன் கலந்து பேசினார்கள். எனக்கு மறுநாள் துணைவேந்தர் அவர்களே சொல்லி அனுப்பி ஆறுதல் கூறினர். மேலும் தேர்வு மிக அண்மையில் இருப்பதால் அப்போது பல்கலைக் கழகத்தை விட்டுச் செல்ல வேண்டாமென அறிவுரை கூறினர். நான் மறுபடியும் மற்ற மாணவருடன் தலைதாழ்த்தி உட்கார முடியாத நிலையினை விளக்கவும் அவர்கள் விலக்கு ஒன்று தந்தனர். அதுமுதல் நான் வகுப்பிற்குச் செல்ல வேண்டாமெனவும் இருந்து தேர்வு மட்டும் எழுதலாம் எனவும் பணிந்தனர். அந்த நல்ல முடிவை ஏற்று அப்படியே அங்கிருந்த தேர்வு எழுதி முடித்து வீடு திரும்பினேன்.