பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

காஞ்சி வாழ்க்கை


கிழமைகளில் காஞ்சிபுரம் வந்து அவர்கள் வீட்டிலேயே இருந்து பாடம் சொல்லித்தர வேண்டும் என்பது ஏற்பாடு. அவர்தம் வீட்டரசியார் தெய்வ நலம் சான்றவர்கள். அவர் வீட்டு மூத்த மகனாகவே என்னை வளர்த்தார்கள் எனலாம். அன்று பழகிய பழக்கம் அவர்கள் சென்னையில் வந்து வாழ்ந்து இறக்கும் வரையில் பற்றியிருந்தது. அவர்தம் செல்வங்கள் இருவரும் இன்றும் சென்னையில் சிறக்க வாழ்கின்றார்கள். என்னை ‘அப்பா’ என்று அன்போடே அழைத்து மகிழ்வார்கள். ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காஞ்சியில் தொடங்கிய அப்பழக்கம் குடும்பப் பழக்கமாய் இன்றுவரை இறுகி வளர்ந்துவருவது எனக்கு இன்ப உணர்வை ஊட்டுகின்றது.

திரு. பஞ்சாட்சர முதலியார் அவர்கள் வெளியே எங்கு சென்றாலும் விடுமுறை நாட்களில் என்னை அழைத்துக் கொண்டே செல்வர். அப்படியே வா. தி. மா. அவர்களும், அதுகாலை எனக்கு அறிமுகமானவர் பலர். யாருமற்று இறையருள் ஒன்றையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் எனக்கு இத்துணை நல்லவர்தம் உறுதுணை மிகவும் பயன் அளித்தது. அவ்வாறு அறிமுகமானவருள் ஒருவர் காஞ்சிபுரம் குமரன் அச்சக உரிமையார் தவசி. குப்புசாமிமுதலியார் அவர்களாவார்கள். அவர்கள் என்னை அவர் தம்பி எனவே போற்றிப் பலவகையில் உதவினார்கள். அவர்தம் ‘காலண்டர்கள்’ பல எனக்குக் கிடைக்கும். அவர்கள் வீட்டுச் சிறப்பு எதுவும் நான் இன்றி நடவாது. ஒருமுறை அவர்தம் புதிய கட்டடத்திற்கு அச்சகத்தை மாற்றும் விழாவில் எனக்கு முக்கியபணி கொடுத்திருந்தார்கள். அந்தநாள் முக்கிய நாளாகவே கருதுகிறேன். ஆம்! அன்றுதான் நான் தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்களை நேரில் கண்டு மகிழ்ந்தேன். அதற்குமுன் ஒருதடவை சென்னையில் கூட்டங்களில் கண்டிருக்கிறேனாயினும் அவரொடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அப்போதுதான் ஏற்பட்டது. பிறகு ஓரிரு