பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

51


கிறேன்–எனது மாமனார் வீட்டிற்குச்சென்று பேசினார்கள். நெடுநேரம் பலப்பலவற்றைப் பேசினார்கள் போலும். என்றாலும் முடிவு ஒன்றும் பயன்தரத்தக்கதாக இல்லை. பின் அவர்களுள் ஓரிருவர் என்னிடம் நடந்ததை யெல்லாம் சொல்லி வருந்தினர். வந்த அவர்களுள் யாருடன் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் தம் மகளை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அல்லது அவர்கள் வீட்டு வேலைக்காரருடனும் அனுப்பத் தயாராக இருப்பதாகவும், என்னுடன் வாழ அனுப்பமுடியாது என்றும் என் மாமனார் கூற, மாமியார் ஆமோதிக்க அவர் வீட்டு ஒரே மூதாட்டியாக இருந்த பாட்டிக்கிழவியும் சரி என்று சொல்ல, சென்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் என அறிந்தேன். இதை நேரில் கேட்டறிந்த என் உடன் ஆசிரியர்கள் என் பொருட்டு மிகவும் வருந்தினர். நான் அப்படியாவது யாருடனாவது சென்று வாழவிரும்பின் அப்பெண் வாழட்டும் என்று எண்ணினேன். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. மாமியார் வீட்டு வசவு மட்டும் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. பார்ப்பவர்கள் ‘எல்லோருக்கும் நல்லபிள்ளையாக இருக்கும் நீ எப்படி மாமியார் வீட்டுக்கு மட்டும் பொல்லாதவனாகிவிட்டாய்?’ என்று இரக்கப்படுவார்கள். ஆயினும் இந்தக் கொடுமைக் கெல்லாம் காரணம், அவர்கள் என்னைக்காட்டிலும் எங்கள் ‘சொத்தி’ன் பேரிலேயே கண்வைத்தமையும் அதை அவர்கள் விருப்பம்போல் தராமல் அன்னையார் கட்டிக் காத்தமையும் அனைவரும் அறிவார்கள். நான் அனைவருடைய இரக்கப் பொருளாகக் காலம்கழித்து வந்தேன். அதற்கிடையில் இளஞ்சிறாருடன் பழகும் வாய்ப்பும் அன்பர் தம் ஆதரவான சொற்களும் என்னைத் தாங்கி வந்தன. பள்ளிப் பணியும் செம்மையாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் என் அன்னையும் பெரிய அன்னையும் எனக்கு மறுமணம் செய்துவைக்க முயன்றனர். நான் திண்டாடினேன். என் நண்பர் சிலரை அவர்கள் அழைத்து எனக்குப் புத்திகூறுமாறு சொன்னார்கள். ஒருசில நண்பர்-