பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

காஞ்சி வாழ்க்கை


உருண்டோடி வருகின்றன. அப்போது ஊரின் நடுவில் ஒரு சிறு அளவில் 'வள்ளலார் இல்லம்' என்று விடுதி இருந்தது. சுமார் 15 அல்லது 20 பிள்ளைகளே அதில் தங்கியிருந்தனர். அவருள்ளும் பெரும்பாலோர் இலவசமாகச் சேர்க்கப் பெற்றவரே. அந்த நாளில்தான் 'பெரியப்பா' பஞ்சாட்சர முதலியாருடைய முயற்சியால் ஊருக்கு மேற்கேயுள்ள தோட்டங்கள் விலைக்கு வாங்கப்பெற்றன. அப்போது அங்கே ஒரே ஒரு பழைய ஓட்டுக் கட்டடம் இருந்தது. சிறு மாற்றத்துடன் இன்னும் அது இருக்கிறது என எண்ணுகிறேன். அப்பாவும் பெரியப்பாவும் விடுதியைத் தனியான அந்த இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டனர். விடுதிக் காப்பாளனாக இருக்குமாறு என்னைக் கேட்டனர். நான் என் நிலைத்த வாழ்வு எது என்று திட்டமிடாத அந்த நாளில் ஒத்துக்கொள்ளவில்லை. எனினும் அந்த ஆண்டே ஆசிரியப் பயிற்சியில் தேர்ச்சியுற்று அங்கேயே நிலைத்த பணியாற்ற வந்த திரு. தணிகை ராயன் (இன்றைய அண்ணா தணிகை அரசு) அவர்கள் அப் பொறுப்பில் ஓரளவு பங்குகொண்டார். நான் ஊருக்குப் போகாத நாட்களில் விடுதியில் தங்கி வேண்டிய உதவிகளைச் செய்து வந்தேன்.

விடுதியைப் புது இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டார்களே ஒழிய, என்று மாற்றுவது என்று என அவர்கள் முடிவு செய்யவில்லை. நான் ஒரு நல்ல நாள் பார்த்து, அன்று விடுதிக் காப்பாளராகிய 'தணிகைராயருடன்' சென்று அந்தப் புதிய இடத்தைச் சுத்தம் செய்து, 'ஸ்டவ்' மூட்டி உப்புமாவு கிண்டி, பால் காய்ச்சி வந்திருந்த அனைவருக்கும் கொடுத்தேன். அந்த நாளே இன்றைய பரந்த இடத்தின் பள்ளியின் கால்கோள் விழா ஆற்றிய நாளாகும். செய்துவிட்டேனே ஒழிய, அப்பாவும் மற்றவரும் என்ன சொல்வரோ என்ற அச்சம் என் உள்ளத்தில் இருந்தது. அன்றோ மறுநாளோ அவர்கள் வந்தபோது, மெல்ல புது வீட்டிற்குச் சென்று பால் காய்ச்சிப் பலகாரம் செய்து சாப்பிட்டு நல்ல நாள் கொண்டதைக் குறித்தேன். இருவரும் மிகவும் மகிழ்ந்தார்கள்,