பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

காஞ்சி வாழ்க்கை


அறிமுகமாயினர். முன்னரே வாலாஜாபாத் வா. தி. மா. அவர்களால் அறிமுகமான கச்சபாலய முதலியார் நெருங்கிய அன்பரானார். அவரே நான் முதல் முதல் உபயோகப்படுத்த சிறு நாற்காலியும் மேஜையும் செய்து தந்தார். அம் மேசையை நான் இன்னும் சென்னையில் பயன்படுத்தி வருகிறேன். நான் பணியாற்றிய ஆண்டர்சன் பள்ளித் தலைமை எழுத்தர் திரு. தேவராச முதலியார் என்பவர் அந்தப்பக்கத்தில் வாழ்ந்தவர்தாம். அவர் அடிக்கடி வீட்டிற்குவந்து வேண்டிய உதவிகளைச் செய்வார். அவருடன் பள்ளியிலும் நல்ல பயனுள்ள பல பணிகளைச் செய்ய முடிந்தது. ஆண்டு தோறும் பள்ளி ஆண்டுவிழாவில் அவரது முயற்சியால் நாடகங்கள் நடைபெறும், அடுத்த வீட்டிலிருந்த ‘இராசம் செட்டி & சன்ஸ்’ உடன் பிறந்தார் எனக்கு உற்றுழி உதவினர். இன்னும் உதவிய அன்பரும் மாணவரும் பிறரும் பலர். அத்துணை நல்லவர்களோடு நான் காஞ்சியில் ஒருசில ஆண்டுகளே பணியாற்றினேன் என்றாலும் அக் காஞ்சி வாழ்வு என் நாட்களில் என்றும் ஒளிவிடும் தொடக்க நல்வாழ்வாக அமைந்துவிட்டது.