பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

காட்டு வழிதனிலே

மாதிரி பொருள் செய்யும்படியாக அந்த நாடோடிப் பாட்டு அமைந்திருக்கின்றது.

இதோ இன்னுமொரு பாட்டு அனல் வீசுகின்ற காற்றிலே பொருள் செறிந்து மிதந்து வருகின்றது.

எருக்கிலைக்குத் தண்ணீர் கட்டி
      எத்தனைப் பூப் பூத்தாலும்
மருக் கொழுந்து வாசமுண்டோ
      மலைப் பழநி வேலவனே

இதில் ஒரு பெரிய உண்மை தொனிப்பதை நாம் கவனிக்கலாம். “விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்” என்று கவிஞர் பாடுகின்றாரே அதுபோல, பயனில்லாத செயலைச் செய்து ஆயுளைக் குறைத்துக் கொள்வது அறிவுடைமை ஆகாது என்பதை இப் பாட்டுக் கூறுகின்றது. பாத்தி கட்டித் தண்ணீர் விட்டு எருக்கஞ் செடியை வளர்ப்பதால் என்ன பயன்? மருக்கொழுந்தை நட்டுத் தண்ணீர் பாய்ச்சினால் பயனுண்டு; இனிய நறுமணத்தைத் துய்க்கலாம். ஆதலால், மருக்கொழுந்தைப் போன்ற நல்ல மணமுள்ள செயல்களைச் செய்வதில் நாம் நம் வாழ்க்கையைச் செலவிடவேண்டும் என்பதை இப்பாட்டுக் குறிப்பாக உணர்த்தி நிற்கின்றது.

அதோ அங்கொரு துறவி பாடிக்கொண்டே மலையேறுகிறான். அவன் உலகத்தைத் துறந்துவிட வேண்டுமென்ற விரதம் கொண்டவன். அந்த விரதத்தை என்றும் மறவாமலிருக்கும்படியாக எப்பொழுதும் நினைவூட்ட வேண்டுமென்று சடை சடை-