பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

காட்டு வழிதனிலே

“பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசுரம் பண்ண வேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை.”

இதைப் படித்த பிறகும் அந்த வாத்தியத்தைத் தொட ஆசை உண்டாகுமா?

சில சமயங்களில் பாரதியாருடைய நகைச்சுவை இந்த மென்மையை விட்டுச் சற்று உறுத்தவும் தொடங்குகிறது. கொஞ்சம் இடித்துக் காண்பிக்க வேண்டும் என்பது அவர் கருத்து :

கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக் கணக்கான ஆடு மாடு குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி இவன் மேலே நடக்கச் சொன்னார்கள் ; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடிக்கச் சொல் ராவணன் கட்டளை இட்டானாம். மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே இல்லை.

“மேற்படி கும்பகர்ணனைப் போலே சில தேசங்களுண்டு, அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காது கேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சில உண்டு.