பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் தேவையா?


ன்று ஒரு புதிய துடிப்பு நம் உள்ளத்திலே ஏற்பட்டிருக்கிறது. அறிவினால் எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்ற புதிய கிளர்ச்சி அது. கண் மூடித்தனமாகப் பலவற்றை இதுவரை ஒப்புக் கொண்டதுபோல இனிமேலும் ஒப்புக்கொள்ள நாம் விரும்புவதில்லை. இது வளர்ச்சிக்கு அறிகுறி. நமது சமூகத்திலே படிந்துள்ள மாசை நீக்கிப் புதிய உயிர் பெற்று வேகமாக முன்னேறிச் செல்வதற்கு அடையாளம்.

மதம் அவசியமா என்ற கேள்வியும் இப்புதிய துடிப்பின் காரணமாகவே தோன்றியிருக்கிறது. மதத்தின் பெயராலே பல பெரிய அநீதிகள் நடந்திருக்கின்றன; நடக்கின்றன. இன்றும் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக மதம் பயன்படுத்தப்படுகின்றது. பிறப்பினால் உயர்வு தாழ்வு மதத்தின் பெயரால் கற்பிக்கப்படுகின்றது. எல்லா உயிர்களுக்கும் தந்தையென மதமே முழங்குகின்ற இறைவன் திரு முன்பும் அம் மதத்தின் பெயராலேயே வேறுபாடுகள் தென்படுகின்றன. சமூகத்திலே வெளிப்படையாகத் தெரிகின்ற ஒரு தீய பழக்கத்தை ஒழிக்க முயன்றால் அதற்கும் மதம் தடையாகப் பல சமயங்களில் குறுக்கிடுகின்றது. சமூக வளர்ச்சிக்காகப் புதிய வழியிலே எண்ணிப் பார்க்கலாமென்றால், "அதுவும் கூடாது;